
தூத்துக்குடி மாவட்டம் :
சூரங்குடி காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு (இயற்கையாக மரணம் வரும் வரை) ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு – இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விளாத்திகுளம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராபர்ட் கென்னடி மகன் தாமஸ் அற்புத ரகசியம் (20/2025) என்பவரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திருமதி. பிரீத்தா அவர்கள் இன்று (21.11.2025) குற்றவாளி தாமஸ் அற்புத ரகசியம் என்பவருக்கு (இயற்கையாக மரணம் வரும் வரை) ஆயுள் தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் பெருமாள் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களையும்,
விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் திருமதி. மணிலெட்சுமி அவர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை நடராஜன், தூத்துக்குடி.












