
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (10.11.2025) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவம் விநியோகம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் 01.01.2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்க கூடிய வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் கடந்த 04.11.2025 அன்று முதல் ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் சென்று வழங்கி வருகிறோம்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக நமது மாவட்டத்தில் உள்ள 14 இலட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களுக்கு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, இதுவரை 8 இலட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் படிவங்கள் வழங்கும் பணி முழுமையாக நிறைவு பெறும்.
அவ்வாறு நிறைவடைந்த பின்னர், அடுத்த கட்டமாக வாக்காளர்களிடமிருந்து அவர்களின் விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்து, படிவங்களை திரும்ப பெறும் பணி தொடங்க இருக்கிறது. 13.11.2025 ஆம் தேதியன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணியில் தொடங்க இருக்கிறார்கள்.
13.11.2025 முதல் 25.11.2025 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு தெருவாகச் சென்று ஒரு நாளைக்கு சுமார் 60 முதல் 75 வீடுகளுக்கு சென்று பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணியில் ஈடுபடுவார்கள். அதேப் போல் ஒவ்வொரு தெருவாகச் சென்று வாக்காளரிடம் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்கு உதவி செய்தும், திரும்ப பெறும் பணியில் ஈடுபடுவார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தோறும் செல்வதற்கான இரண்டாம் வருகை 25.11.2025 வரை திட்டமிட்டுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 22.11.2025 (சனிக்கிழமை) ஆகிய தினங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளை திறந்து, அங்கு அமர்ந்து, வாக்காளரிடம் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது தொடர்பாக உதவி செய்தல் மற்றும் திரும்ப பெறுவது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்திட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்த பணிகளில் வாக்காளர்களுக்கு உதவி செய்வதற்காக, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய உதவிகுழுவின் சமுதாய வளர்ச்சி பயிற்றுநர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டிருக்ககூடிய பணியாளர்கள், ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பிற பணியாளர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து இப்பணிகளில் ஈடுபடுத்தி, வாக்காளர்களுக்கு உதவி செய்வதற்காகவும், மேலும் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறோம்.
திட்டமிட்டப்படி 25.11.2025 தேதிக்குள் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று இரண்டாம் வருகையினை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மூன்று முறை (3 Visit) வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தியிருக்கிறது.
25.11.2025ஆம் தேதிக்கு பின்னர், குடிபெயர்ந்த (absent), நிரந்தரமாக குடி பெயர்ந்த (Shifter), இறந்த ( Death) வாக்காளர்களை மூன்றாம் முறை வீடு வீடாகச் சென்று உள்ளூர் ஆய்வின் மூலம் அந்த தகவல்களை பதிவு செய்து சரிபார்த்திடவும், திரும்ப பெறாத பிற கணக்கெடுப்பு படிவங்களையும் மூன்றாவது முறை சந்திப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் திரும்ப பெறுவார்கள்.
25.11.2025 முதல் முன்றாம் முறை (3rd Visit) சந்திப்பினை திட்டமிட்டுள்ளோம். இறுதியாக இப்பணிகள் ஒரு மாத காலத்திற்கு 04.12.2025 வரை நடைபெறும். அதன்பின்னர், வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்களை பரிசீலனை செய்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்பின்னர் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைத்தல் தொடங்கும். இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளை நிறைவு செய்து, 9-12-2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இறுதியாக 7-2-2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையில் வெளியூரில் இருக்க கூடிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு ஏதுவாக இணையதளம் வாயிலாக கணக்கெடுப்பு படிவத்தை சமர்பிக்கும் வசதியினை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
https://elections.tn.gov.in மற்றும் https://thoothukudi.nic.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில். https://erolls.tn.gov.in/electoralsearch/ மூலம் ஒவ்வொரு வாக்காளர் விபரத்தினையும், https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002..aspx என்ற இணையதளத்தில் 07.11.2025 அன்று முதல் voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாக்காளரின் பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் சரியாக பொருந்திருக்க வேண்டும்.
மேலும், வாக்காளரின் மொபைல் எண்ணும் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால், படிவம்-8 நிரப்பி கொடுத்தால், வாக்காளர் பட்டியலுடன் மொபைல் எண் இணைத்துக் கொள்ளலாம். தற்காலிகமாக வெளியூரில் இருக்க கூடிய வாக்காளர்களுக்கு படிவம் 8 பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இணையதளம் வசதியும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இரண்டாவது முறை சந்திப்பில் ஒவ்வொரு தெருக்களுக்கும் எப்பொழுது எல்லாம் செல்ல உள்ளார்கள் என்பதற்கான காலஅட்டவணையை அந்த வாக்குச்சாவடியினுடைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு (Agents) வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, 13.11.2025 அன்று வழங்கப்படும் மற்றும் அதன்பின்னர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இரண்டாவது முறை செல்கின்ற பொழுது, வாக்காளர்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான நிகழ்வுகள், எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை முகவர்களின் கண்காணிப்பிலும், ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். ஓரிரு நாட்களில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த படிவங்கள் எல்லாம் சென்று சேர்ந்து விடும். அதன்பின்னர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யும் பணி நடைபெறும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி என்பது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடிய பெயர்களை சரிபார்த்தல் ஆகும். 9-12-2025 முதல் 8-1-2026 வரை புதிய வாக்காளர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்த படிவங்கள் பெறும் பணி நடைபெற உள்ளது. அதுவரை புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் வழங்கப்படாது. தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து மற்றும் திரும்ப பெறுவதற்கான உதவிகளை செய்வதற்கு அனுமதிகளை வழங்கியுள்ளது.
கணக்கெடுப்பு படிவம் தற்போது வாக்காளர் பட்டியலில் எந்த முகவரியில் உள்ளதோ அந்த முகவரிக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2002க்கான விவரங்கள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 2002க்கான பட்டியலை சரிபார்த்தலுக்காக வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது செயலி மூலமும் தேடி பார்க்கலாம்.
நமது மாவட்டத்தில் உள்ள 1627 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவீதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள படிவங்கள் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெறும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அந்தந்த வீடுகளுக்கு சென்று திரும்ப பெற்றுக் கொள்வார்கள். அப்பணிகள் 13.11.2025 அன்று முதல் தொடங்கப்படும். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் வாக்காளர் இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படாது. இறந்தவர்களுக்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்க முடியாது. சிறப்பு தீவிர திருத்தத்தில் அவர் இறந்தவர் என்று குறிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.









