
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா இலுப்பநகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அரசு வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு காரணமாகத் தனது 12 ஏக்கர் தென்னந்தோப்பிற்குள் செல்ல முடியாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாதிக்கப்பட்ட விவசாயின் தோப்பில் சுமார் 750 முதல் 800 தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்திற்குச் செல்லக்கூடிய அரசு புறம்போக்கு வண்டிப்பாதையைச் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தின் (Map) படி இது அரசாங்க வண்டிப்பாதை தான் என்பதை கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வண்டிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தோப்பிற்குள் செல்லவோ மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சவோ முடியாத நிலை நீடிக்கிறது. இதனால்,12 ஏக்கர் பரப்பளவில் (3 ஏக்கர் மற்றும் 9 ஏக்கர் என இரு பகுதிகளாக உள்ள) செழிப்பாக இருந்த தென்னை மரங்கள் தண்ணீரின்றி நாளுக்கு நாள் காய்ந்து கருகி வருகின்றன.
இன்னும் ஒரு வாரத்திற்குள் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் அனைத்து மரங்களும் முற்றிலும் பட்டுப்போய்விடும். அதன் பிறகு அரசாங்கம் தார்ச் சாலையே அமைத்துக் கொடுத்தாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று அந்த விவசாயி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், உள்ளூர் காவல் நிலையம் எனப் பல இடங்களிலும் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயி குற்றம் சாட்டியுள்ளார். இதுமட்டுமன்றி சென்னை வரை சென்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க முயன்றும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும் அரசு அலுவலகங்களில் உரிய மரியாதை கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கண் முன்னேயே வாழ்வாதாரமான மரங்கள் அழிவதைக் கண்டு கலங்கும் அந்த விவசாயி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இந்த அரசு வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மை எப்போதும் உரக்கச் சொல்லும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்.








