சிவகங்கை அருகே பரபரப்பு! அரசு துவக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகிலுள்ள கல்லராதினிபட்டி அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 15 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகில் கல்லராதினிப்பட்டி எனும் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 64 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கூடத்திற்கு 63 மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். இவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. உணவு இடைவெளியில் மதிய உணவை மாணவ, மாணவிகள் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 15 மாணவிகள் மற்றும் 6 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட 21 மாணவர்களையும் கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு வட்டார மருத்துவர் பார்த்தசாரதி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன்,  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புச்செல்வி, வட்டாட்சியர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களிடம் விசாரித்தனர்.

மேலும், அந்த உணவின் மாதிரியை உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை பார்வையிட்டு நலம் விசாரித்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பதற்றத்துடன் கூடினர். எனவே, அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

– ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp