காவல்துறை பாதுகாப்புடன், பந்தாவாக உலா வருவதற்காக, தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட, இந்து மகா சபா அமைப்பின் மாநில நிர்வாகியை அதிரடியாக கைது செய்திருக்கிறது, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த செந்தில் (எ) பெரி.செந்தில், அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு, உளுந்தூர்பேட்டையில் உள்ள இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அதையடுத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், தன்னை கொலை செய்வதற்காக பெட்ரோல் குண்டை வீசியதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார், பெரி.செந்தில். உடனடியாக தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். அத்துடன் பெரி.செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்ததுடன், காவல் ஆய்வாளர் குணபாலன் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்.
பெரி.செந்தில் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்த காவல்துறையினர், பெரி.செந்திலின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பும், அதற்கு முந்தைய நாள்களிலும், சென்னையைச் சேர்ந்த மாதவன் என்பவருடன் செந்தில் தொடர்ச்சியாக பேசியது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து மாதவனை அழைத்து வந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, “போலீஸ் பாதுகாப்புடன் பந்தாவாக வலம் வருவதற்காக பெரி.செந்தில், அவர் தம்பி ராஜீவ் காந்தி, மகன் மணிகண்ட சந்துரு உள்ளிட்ட மூவரும் அவர்கள் வீட்டிற்கே என்னை பெட்ரோல் குண்டை வீசுமாறு கூறினர்” என, மாதவன் வாக்குமூலம் அளித்தார். இதன் மூலம், தனது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, தானே ஆள் வைத்து செந்தில் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்தது.
உடனடியாக மாதவனை கைதுசெய்த காவல்துறையினர், பெரி.செந்தில், அவர் சகோதரர் ராஜீவ் காந்தி, மகன் மணிகண்ட சந்துரு உள்ளிட்டவர்களைக் கைதுசெய்வதற்காக சென்றனர். அப்போதுதான் அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. உடனே அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம், கம்பத்தில் பதுங்கியிருந்த பெரி.செந்திலையும், அவர் மகன் மணிகண்ட சந்துருவையும் கைது செய்தனர். அதன் பிறகு மூவரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரசுதன் முன்பு நேர் நிறுத்தி, கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தலைமறைவாக இருக்கும் ராஜீவ் காந்தியையும் தேடி வருகின்றனர். இது குறித்து விசாரணை அதிகாரிகள், “அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருக்கும் பெரி.செந்தில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி உறுப்பினராகவும், பசு பாதுகாப்பு பிரிவின் மாநில அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
பெரி.செந்தில் எங்களிடம் புகாரளித்ததுமே, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணையை துவக்கினோம். அதன்படி செந்திலின் சகோதரர் ராஜீவ் காந்தியிடம், விசாரணைக்காக மறுநாள் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறினோம். அப்போது சரியென்று கூறியவர், மறுநாள் செல்போனை அணைத்து விட்டு, தலைமறைவாகிவிட்டார். அதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் செந்திலின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்படித்தான் மாதவனை கைதுசெய்தோம். பெரி.செந்திலின் மகனான மணிகண்ட சந்துரு, தன் அப்பாவை அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும் என்று சித்தப்பா ராஜீவ் காந்தியிடம் கூறியிருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர் உடனே, `நம் வீட்டிற்கு நாமே ஆள் வைத்து பெட்ரோல் குண்டை வீசிக் கொண்டால், போலீஸ் பாதுகாப்பு கொடுப்பார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா, அண்ணாமலை வரைக்கும் நம்மைப் பற்றி தெரிய வரும். கட்சியிலும் பெரிய பதவிகள் கிடைக்கும்’ என்று கூறியிருக்கிறார். மணிகண்ட சந்துரு அதற்கு ஒப்புக்கொள்ளவே, சென்னையில் உள்ள தனது நண்பர் மாதவனை வரவழைத்திருக்கிறார் ராஜீவ் காந்தி. அதன்படி சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை வந்த மாதவன், மது குடித்துவிட்டு அந்த காலி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பெரி.செந்தில் வீட்டில் வீசியிருக்கிறார். இந்த பெரி.செந்தில், 2015ஆம் ஆண்டு, தன் காரின் மீது யாரோ பெட்ரோல் குண்டை வீசினார்கள் என்று மங்கலம் பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதேபோல 2018ஆம் ஆண்டு இதே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், எனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டதாலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று எங்களிடம் கேட்டார். அதற்கு முகாந்திரம் இல்லாததால் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இப்படி சிக்கியிருக்கிறார். மேலும் ஏற்கெனவே இரண்டு முறை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக இவர் கொடுத்த புகாரும் பொய்தான் என தெரிய வந்திருக்கிறது” என்றனர்.
– பாரூக்.