
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து வனவிலங்கு தாக்குதல்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் எந்த நேரத்திலும் வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சுறுத்தலுடன் இரவைக் கழிக்கின்றனர். வனத்துறையும், எஸ்டேட் நிர்வாகமும் உரிய பாதுகாப்பை வழங்குவதில்லை என்றும், பாதுகாப்பான குடியிருப்புகள், தேவையான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சமீபத்தில், சோலையார் டேம் பகுதியில் மணி என்பவரின் வீட்டை ஐந்து யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், எஸ்டேட் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள், தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைத்தல், அடர்ந்த புதர்களை அகற்றுதல் போன்ற நிரந்தர நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமென்றால், பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்றும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், சாமானிய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அடிப்படை தேவைகள் கிடைக்காததற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் தேர்தல் கால தவறுகளே காரணம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, தமிழக அரசு இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வனவிலங்கு தாக்குதலில் இருந்து நிரந்தர பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-P.பரமசிவம்.











