​வாரத்தில் ஒருநாள் மட்டுமே வரும் நகராட்சி ஆணையர் வால்பாறையில் அவலச் சாலைகள் எரியாத தெருவிளக்குகளால் மக்கள் அவதி நல்ல நிலையில் இருந்த நிழற்குடைகள் இடிப்பால் அதிருப்தி!!

​​

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியுமாகவும் விளங்கும் வால்பாறையில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​வால்பாறை, சோலையார், உபாசி, மானாம்பள்ளி பவர் ஹவுஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் பல வருடங்களாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகத் தார் உந்து போய் காட்சியளிக்கின்றன. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பொதுமக்களும் அன்றாடப் போக்குவரத்திற்குப் பெரிதும் அவதிப்படுகின்றனர். அவசரக் காலங்களில் மருத்துவ வசதி பெறக் கூட உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் அவல நிலையும் தொடர்கிறது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் நகராட்சி நிர்வாகம் சார்பில் போதிய தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் இருக்கும் விளக்குகளும் பழுதடைந்து எரியாமல் உள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.

வால்பாறை, ரொட்டிக்கடை, சோலையார் டேம் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளின் அருகே உள்ள பொதுமக்களின் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள், நடைபாதைகள் மற்றும் சாலைகளைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. ஆனால் மறுபுறம் நல்ல நிலையில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகளை இந்த மழைக்காலத்திலும் பொருட்படுத்தாமல் இடித்து பல லட்ச ரூபாய் நிதியில் மீண்டும் புதிதாகக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையப் பராமரிப்பு என்ற பெயரிலும் லட்சக்கணக்கில் நிதி செலவிடப்படுகிறது. அத்தியாவசியத் தேவைகளான சாலை மற்றும் தெருவிளக்குகளுக்கு நிதி ஒதுக்காமல் நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்துக் கட்டுவது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பாகப் பொதுமக்களின் புகார்களைத் தெரிவிக்க வால்பாறை நகராட்சி ஆணையரைச் சந்திக்கச் சென்றால் அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வரும் நாளிலும் முக்கிய அரசியல் பிரமுகர்களை மட்டுமே மூடிய அறைக்குள் சந்திப்பதாகவும் சாமானிய மக்கள் பிற அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பல மணி நேரம் காத்திருந்தும் அவரைச் சந்திக்க முடிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க பிரத்யேகமாக ஒரு அதிகாரி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவதாகவும் செய்தியாளர்கள் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாமானிய அடித்தட்டு மக்களுக்காகவே எங்கள் அரசு உழைக்கிறது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் மாற்று அரசியல் கட்சியினரும் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில் வால்பாறையில் எந்த ஆட்சி வந்தாலும் தங்களது வாழ்வாதார நிலை மாறவில்லை என்பதே எதார்த்த உண்மை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
​மலைப்பிரதேச மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வால்பாறை மக்களின் அடிப்படைத் தேவைகளில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் வால்பாறை P.பரமசிவம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts