
எட்டையபுரம்: ஒரு 7 மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசர நேரத்தில், வெறும் நான்கு மணி நேரத்திற்குள் தேவையான உறவுமுறைச் சான்றிதழை வழங்கி மனிதநேயத்தின் உயரத்தை நிரூபித்துள்ளார் எட்டையபுரம் வட்டாட்சியர் திருமதி சுபா அவர்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எட்டையபுரம் வட்டத்தைச் சேர்ந்த ஒரு 7 மாத குழந்தை, கடுமையான கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சென்னை மருத்துவமனை நிர்வாகம், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறவுமுறைச் சான்றிதழை உடனடியாக பெற்று வருமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.
அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளம் வாயிலாக உதவி கோரி தொடர்பு கொண்டனர். உடனடியாக சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு மற்றும் கோவில்பட்டி கரு. இராஜசேகரன் ஆகியோர் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினர்.
விஷயத்தின் அவசரத்தையும் குழந்தையின் உயிரின் மதிப்பையும் உணர்ந்த வட்டாட்சியர் திருமதி சுபா அவர்கள் எந்தவித தாமதமும் இன்றி நடவடிக்கையில் இறங்கினார். சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான விசாரணை மற்றும் பரிந்துரைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
சோழபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் டி.சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு மீண்டும் வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அலுவலக நேரம் முடிவடையும் தருவாயிலும் கூட, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் இல்லாத நிலையில் வேறு அலுவலரை அழைத்து சான்றிதழை தயார் செய்து வழங்க நடவடிக்கை எடுத்தார்.
இறுதியாக வெறும் நான்கு மணி நேரத்திற்குள் அந்த குழந்தையின் உயிர்காக்கும் சிகிச்சைக்குத் தேவையான உறவுமுறைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண சான்றிதழுக்காகவே பொதுமக்கள் பல அலுவலகங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் ஒரு குழந்தையின் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து, மனிதநேயத்துடன் செயல்பட்ட இந்த அதிகாரியின் சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இந்த நிகழ்வில் உதவி செய்த வட்டாட்சியர் திருமதி சுபா அவர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு கடவுள் அனுப்பிய தூதர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த மனிதநேய காட்சிகள், நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றன என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நேரத்தோடு போராடிய இந்த சேவை, சாதாரண அலுவல் நடவடிக்கை அல்ல; இது மனிதநேயத்தின் வெற்றி.
இந்த அர்ப்பணிப்புமிக்க அதிகாரிக்கும், உதவி செய்த அனைத்து அலுவலர்களுக்கும் தமிழக அரசும், வருவாய் துறையும் தகுந்த அங்கீகாரமும் கௌரவமும் வழங்க வேண்டும்.
இந்த நல்ல செய்தி அனைவரையும் சென்றடையட்டும். எட்டையபுரம் வட்டாட்சியர் திருமதி சுபா அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். இந்த மனிதநேய சேவை மேலும் பல அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக அமையட்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.










