
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் புறக்கணித்து வருவதாகவும் இதற்கு முக்கியத் தொழிற்சங்கங்கள் மௌன ஆதரவு அளிப்பதாகவும் சி.ஐ.டி.யு. (CITU) தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் பரமசிவம் வன்மையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக ஒப்பந்தம் போட்டு எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றன. 8 மணி நேர வேலை என்பது மாற்றப்பட்டு அதிகாலை 6:30 முதல் மாலை 6:30 மணி வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது. கூடுதல் நேரத்திற்கு முறையான ஊதியம் வழங்காமல் கிலோவுக்கு 8 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது.
விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களைத் தூரமான இடங்களுக்கு மாற்றுவதும் பணி செய்யும் இடங்களில் அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரம் ஐயர்பாடி எஸ்டேட்டில் வெளிமாநிலத் தொழிலாளி ஒருவர் கரடி தாக்கி காயமடைந்தார். பாதிக்கப்பட்ட தொழிலாளிக்குத் தோட்ட நிர்வாகமே சிகிச்சை அளித்திருந்தாலும் அதிகாலை நேரத்தில் கட்டாயப்படுத்தி நேரத்தோடு வேலைக்கு வரவழைத்ததால்தான் இந்த விபத்தே ஏற்பட்டது என்பது வேதனைக்குரியது.
தொழிலாளர்களிடம் சந்தா வசூலிக்கும் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 5 கட்சிகளின் தொழிற்சங்கங்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த அநீதிகளைக் கண்டும் காணாமல் மௌனம் காக்கின்றனர். பெயரளவில் தொழிலாளர்களிடம் பேசிவிட்டு பின்னர் நிர்வாகத்துடன் இணக்கமாகி விடுகின்றனர்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறார்கள். வாய் இருந்தும் பேச முடியாமல் தவிக்கும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்
பரமசிவம், பொதுச்செயலாளர் (CITU)
விளம்பர வெளிச்சம் இல்லாத விளிம்புநிலை மனிதர்கள்:
வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படும் இந்தத் துயரங்கள் குறித்தோ, சி.ஐ.டி.யு. அமைப்பின் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்தோ பிரதான ஊடகங்கள் எவையுமே செய்திகளை வெளியிடாமல் மௌனம் காப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உழைக்கும் வர்க்கத்தின் குரல் தொடர்ந்து நசுக்கப்படுவதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை எப்போதும் உரக்கச் சொல்லும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்.





