சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலையில் உள்ள கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிய அதிரடி சோதனை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்
(அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, சிவகங்கை முத்திரை ஆய்வாளர் ராம்மோகன், காரைக்குடி முத்திரை ஆய்வாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் தீனதயாளன்,
காரைக்குடி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கலாவதி, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம், எஸ்.எஸ்.ஏ மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி, டி.சி.பி.யு கவுன்சிலர் ஜாய்சாராள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரசீந்திரகுமார் ஆகியோர் அடங்கிய மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு சிங்கம்புணரி – திண்டுக்கல் சாலையில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வில் மளிகை கடை மற்றும் நகைப்பட்டரைகளில் 8ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தெரியவந்தது. எனவே சம்மந்தப்பட்ட மளிகைக்கடை மற்றும் நகைப்பட்டரை உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிபுரிந்து கொண்டிருந்த சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து, ‘எங்களது குழந்தைகளை இனிமேல் கடைகளுக்கு வேலைக்கு அனுப்பமாட்டோம், பள்ளிக்கு அனுப்புவோம்’ என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
– அப்துல்சலாம்.