73வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அலட்சியமாய் இருந்திருக்கிறார்கள்.
இதனைக் கவனித்த செய்தியாளர்கள், ஏன் எழுந்து நிற்கவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்குரைஞரான ராஜேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதுடன், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– பாரூக்.
One Response
Thank you. Take serious action.