மதுரைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக மலர்தூவி வரவேற்றனர். ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு, ஒன்றிய அரசால் தில்லி குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டு, சென்னை குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தது. அப்போது மதுரை – திருச்சி நெடுஞ்சாலையின் மாவட்ட எல்லையான மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி அடுத்த சூரப்பட்டி என்ற கிராமத்தில் அலங்கார ஊர்தியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மேள தாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை வந்துள்ள ஊர்தியில் வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், புலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஊர்தி மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஜனவரி 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
– மதுரை வெண்புலி.