தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவி மரணத்துக்கு மதம் மாறுமாறு வற்புறுத்தியதுதான் காரணம் என்று பாஜகவும், இந்து அமைப்பும் ஆரம்பத்திலிருந்தே குற்றம் சாட்டி வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், மதமாற்றம் நடந்ததாக மாணவி சொல்வது போன்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து பாஜக போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி பேசும் புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் மதமாற்றம் குறித்த எந்தவித குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. வார்டன் அதிகமாக வேலை வாங்கியதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கினேன். இதனால் தற்கொலை செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.
மாணவியின் மரணத்தைத் தவறாகச் சித்தரித்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்று அளித்தனர். அதில்,”எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் அடங்குவர். எங்கள் ஊர் பழமையான ஊர். இந்தநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடனும் ஒரே குடும்பமாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்தநாள் வரைக்கும் மத சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையும் நடந்தது இல்லை. எங்கள் ஊரில் நடைபெறுகின்ற மத சம்பந்தமான திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்போம். எங்கள் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி கொண்டு வருகிறது. இங்கு சுமார் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தினர் பயின்று வருகின்றனர்.
அதேபோல் விடுதியிலும் இந்து மாணவியரே அதிகம் படிக்கின்றனர். இந்தப் பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் மாணவி மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்களூரில் சகோதரத்துடனும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்தோடும் வாழ்வதை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள். நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக யாரும் எங்கள் பகுதிக்குள் வரக் கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், “ எங்கள் ஊரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். மறைமுகமாக எங்களிடம் நாங்கள் சொல்வது போல், ஒரு தரப்பினருக்கு எதிராக பேட்டி கொடுக்கும்படி எங்களை நிர்பந்திக்கின்றனர். இந்தப் பள்ளி எங்கள் ஊரில் இருப்பது எங்களுக்குப் பெருமைதான். எங்களின் மத ஒற்றுமையை யாரும் சீர்குலைத்திடக் கூடாது. எங்கள் ஊருக்கு பாதுகாப்பு வேண்டும். ஒரு பிரிவினர், இப்படி சொல்லுங்கள், அப்படி சொல்லுங்கள் என்று சொல்வது இருக்க கூடாது. சிலர் எங்களை நிர்பந்தம் செய்கிறார்கள். அவர்கள் எங்கள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்” என்று கூறினர்.
இதற்கிடையில், மாணவி விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பு, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
– பாரூக்.