அதிமுகவில் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கூறப்பட்டு வந்த நிலையில் திமுக இப்போது அதில் ஓட்டை போட்டு உள்ளது என்று திமுகவினர் பெருமை பாராட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் திமுக 112 இடங்களிலும, அதிமுக வெறும் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
பேரூராட்சிகளில் பொருத்தவரையில் திமுக 280 இடங்களிலும் அதிமுக 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை திமுக அதில் நெருங்க முடியாது என அதிமுகவினர் மார்தட்டி வந்த நிலையில், கோவை, சேலம், ஈரோடு என அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் சூழல் உருவாகி உள்ளது.
பொதுவாக மேற்கு மாவட்டங்களில் திமுக பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சி, வால்பாறை நகராட்சி, ஈரோடு மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, காங்கயம் நகராட்சி, பல்லடம் நகராட்சி போன்றவை அதிமுக நீண்டகாலமாக கோலோச்சி வந்த இடங்களாலும் இந்த இடங்களை திமுக வசப்படுத்தியுள்ளது. 100 வார்டுகளை கொண்ட கோவையில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை, ஆனைமலை, பேரூர், சூலூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளது.
கோவையில் மாநகராட்சியை திமுக கைப்பற்று என்பது உறுதியாகி உள்ளது. சேலம் திமுகவின் வசம் வந்துள்ளது, சேலத்தில் திமுக 24 இடங்களிலும் அதிமுக வெறும் மூன்று இடங்களிலுமே முன்னிலையில் உள்ளது.
வெற்றிக்காண காரணம் என்ன.?
அதிமுக தனது முதல் சட்டமன்ற உறுப்பினரை கோவை மண்டலத்தில் இருந்து தான் பெற்றது, எப்போதும் ஜெயலலிதாவுக்கு கைகொடுக்கும் மண்டலமாகவே கொங்கு மண்டலமாக இருந்துவந்தது.
அதிமுகவுக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் இருக்கிறோம் என கைகொடுக்கும் மண்டலமாக இருப்பது கொங்கு மண்டலம்தான். அது இயல்பாகவே இந்துத்துவா, வலதுசாரி சிந்தனை கொண்ட பகுதியாகும். இது எப்போதும் திராவிடத்திற்கு எதிரான பகுதி என்ற கருத்து பல ஆண்டுகளாக நிலவுகிறது.
இதுவே அதிமுகவுக்கு சாதகமாக அங்குள்ள மக்கள் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த சூழல் மாறியுள்ளது. கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் கூட பெற முடியாத செல்வாக்கை இப்போது ஸ்டாலின் பங்கு பெற்றிருக்கிறார். குறிப்பாக ஆட்சிக்கு வந்த எட்டு மாத காலத்தில் ஸ்டாலின் மேற்கு மண்டலத்தை குறிவைத்து நடத்திய பிரச்சாரம் இதற்கு காரணமாக உள்ளது. அதாவது கொங்கு மண்டலத்தை குறிவைத்து செய்த செயல்கள் மற்றும் முக்கிய திட்டங்கள், அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக முதலீடுகள் குறித்த மாநாடு, தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்த திட்டங்கள், தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்து ஸ்டாலின் பேச்சு,அவர் எடுத்த நடவடிக்கைகள் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துதான் நான் முதலமைச்சர், அவர்களுக்கும் நான் கடமை செய்வேன், இவருக்கு ஓட்டு போட தவறி விட்டோமே என்று நீங்கள் வருந்தும் அளவிற்கு நான் உங்களுக்காக பாடுபடுவேன் என கடந்த 9 மாதங்களாக ஸ்டாலின் பேசி வந்தது அங்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இதேபோல் பாஜகவால் திமுகவுக்கு எதிராக முன்வைத்த பிரச்சாரங்கள், அதாவது திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதுபோன்ற பிரச்சாரங்கள் அங்கு எடுபடாமல் போயுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக திமுகவுக்கு ஓட்டு போடுபவர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும் தற்போது ஸ்டாலின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது.
அவர்கள் மத்தியில் ஸ்டாலின் புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார் என்பது இத்தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக இருந்தபோது, கொங்குமண்டலம் அதிகளவில் பாதிக்கப்பட்டது, அப்போது முதல்வர் ஸ்டாலின் பிபிஇ கிட் முழு கவச உடை அணிந்துகொண்டு மருத்துவமனை வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தது கொங்கு மண்டல பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியான கொங்கு மண்டலத்திற்கு இதுவரை மத்திய அரசு பெரிய திட்டங்கள் எதுவும் செய்யவில்லை, இந்த நேரத்தில் மத்திய அரசை துணிச்சலாக எதிர்க்கும் முதல்வராக ஸ்டாலின் அறியப்படுகிறார்.
இதனால் ஸ்டாலின் மீது அங்குள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது இதுதான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். இதுவரை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றும், அதன் தளபதி எஸ்.பி வேலுமணி என்றும் இருந்துவந்த பிம்பத்தை, ஸ்டாலின் வியூகம் வகுத்து, செந்தில் பாலாஜி என்ற தளபதியை வைத்து சுக்குநூறாக உடைத்துள்ளார். இது எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட கொங்கு அதிமுக தலைவர்களை நிலைகுலைய செய்துள்ளது என்றே சொல்லலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.