நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சி 62-வது வார்டு நஞ்சுண்டாபுரத்தில் வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக ஒரு குடோனில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க.வினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
உடனே அ.தி.மு.க.வினர் அந்த குடோன் முன் திரண்டனர். இதை அறிந்த தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விரைந்து வந்தனர்.
ஆனால் குடோன் பூட்டிக் கிடந்தது. உரிமையாளர் இல்லாததால் குடோனை திறக்க முடியாத நிலை இருந்தது.
உடனே குடோன் பூட்டை உடைத்து திறக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கோஷமிட்டனர். இதையடுத்து பறக்கும் படையினர் குடோன் பூட்டை உடைத்து திறந்தனர்.
அங்கு 13 அட்டை பெட்டிக ளில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் ஹாட் பாக்ஸ்கள் இருந்தன.
இதை கண்ட அ.தி.மு.க.வினர், ஹாட் பாக்சில் பணம் வைத்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வைத்து இருக்கலாம் என்று கூறினர். உடனே ஹாட்பாக்சுகளை அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.
அதற்குள் பணம் ஏதும் இல்லை. இதையடுத்து ஹாட் பாக்ஸ்களை அதிகாரிகள் அதிரடி யாக பறிமுதல் செய்தனர்.
இதேபோல் 71-வது வார்டு தெலுங்குபாளையம் பகுதியில் சிலர் வீடு, வீடாக சென்று ஹாட் பாக்ஸ் வழங்குவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அ.தி.மு.க.வினர் விரைந்து சென்று ஹாட் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் விரைந்து வந்து அந்த ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கரும்புகடை பகுதியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது
கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களில் பீளமேடு, சுகுணாபுரம், நஞ்சுண்டாபுரம், தெலுங்குபாளையம் உள்பட 6 இடங்க ளில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி பகுதியில் உரிய ஆவணங் கள் இன்றி இதுவரை கொண்டு சென்ற ரூ.42 லட்சத்து 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.