தற்காப்புக் கலையில் மிக முக்கியமா ன கலையாக சிலம்பம் விளங்கி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட கலையாக சிலம்பம் அறியப்படுகிறது. சிலம்பம் கலையில் சாதனை புரியும் வகையில் கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி யில் உள்ள முருகன் நகரில் நான்கு வயது சிறுவன் விதுன் தொடர்ந்து 5 மணிநேரம் இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளார். சிறிதும் சோர்வில்லாமல் சிறுவன் விதுன் அதிவேகமாக சிலம்பம் சுற்றுவது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ்,
வெறும் நான்கு மாத கால பயிற்சி எடுத்துக் கொண்டு இந்தச் சாதனையை விதுன் புரிந்துள்ளதாக தெரிவித்தார். சிலம்பம் கலை கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த சாதனை அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான் கொம்பு உள்ளிட்ட கலைகளிலும் மாணவர்களுக்கு தங்கள் முல்லை மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவன் விதுனின் பெற்றோர்களான நவீன்குமார், வித்யஸ்ரீ, சிலம்பம் பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரகாஷ்ராஜ் – சிலம்பம் பயிற்சியாளர்,முல்லை மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
– சீனி,போத்தனூர்.