நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் இரண்டு வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் (அம்பலமுத்து மற்றும் வள்ளி மனோகரன் ஆகியோர்) போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கு ஏதுவாக தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்ட இரு அதிமுக வேட்பாளர்களும், அவர்களுக்கான பொறுப்பாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;-அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை சுயேட்சையாகப் போட்டியிடுதல் முதலான காரணங்களால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த,
வையாபுரிப்பட்டி ராஜேந்திரன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர்),
கணேஷ் ஆனந்த் (சிங்கம்புணரி பேரூராட்சி 5வது வார்டு செயலாளர்),
கா.ரபீக் (1வார்டு அதிமுக வேட்பாளர், சிங்கம்புணரி நகர அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர், 1-வது வார்டு அதிமுக செயலாளர்)
5வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தேன்மொழி கணேஷ்,
13 மற்றும் 16ஆவது வார்டுகளில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடும் நித்யா ஜெயங்கொண்டான் ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம். மேலும், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.