சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியில் செல்வம் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார்.
அவரது மகன் முகுந்தன்(22). கட்டிடக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். குடிக்கு அடிமையான இவர், தற்போது பல்வேறு இடங்களில் கொத்தனார் வேலை செய்து வந்திருக்கிறார்.
நேற்றிரவு முகுந்தன், தனது வீட்டின் மாடியில் மது அருந்தியிருக்கிறார். மேலும் மது தேவைப்பட்டதால் தனது தந்தை செல்வத்திடம் சென்று பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று தந்தை சொன்னதால், தாய் லதா மற்றும் தந்தை செல்வம் இருவருடனும் தகராறு செய்திருக்கிறார்.
உடனடியாக அவரது தாய் லதா அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க வெளியே சென்றிருக்கிறார்.
இதற்கிடையில், ஏற்கனவே குடிபோதையில் இருந்த முகுந்தன், தான் அணிந்திருந்த பனியனைக் கழட்டி தந்தை செல்வத்தின் கழுத்தை நெறித்துள்ளார். இதனால், தந்தை செல்வத்தின் உயிர் உடனடியாகப் பிரிந்தது.
தனது தம்பி, தந்தையைக் கொலை செய்தது குறித்து முகுந்தனின் அக்கா புனிதா சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிணக் கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தந்தையைக் கொலை செய்த மகன் முகுந்தனை, சிங்கம்புணரி காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
– ராயல் ஹமீது, அப்துல்சலாம்.