சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் உள்ள உச்சிக் கருப்பர் கோயில் படையல் விழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக, மங்கான் வகையரா உறவின்முறை பங்காளிகள் உச்சி கருப்பர் கோயிலுக்கு வாணவேடிக்கையுடன் ஜவுளிகள் கொண்டு வந்தனர்.
சாமி தரிசனத்திற்குப் பின் தொழுவிற்கு ஜவுளிகள் கொண்டு வரப்பட்டன. அதன்பின்பு முதலாவதாக சேவுகமூர்த்தி கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டன.
அதன்பின், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 500க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள், கட்டு மாடுகளாக ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் கலந்துகொணடனர்.
20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வயல்வெளிகளிலும், சாலைகளிலும் நின்று மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.
காளைகளைப் பிடிக்க ஆர்வம் காட்டிய மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மஞ்சுவிரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்தனர்.
மாடுகளை பிடிக்கும் போது 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
– அப்துல்சலாம்.