மேலூர் நகராட்சியில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப்பை அகற்றி விட்டு வருமாறு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சி முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர், வெளியேற்றப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 8-வது வார்டில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அம்சவேணி என்பவர் தனது மகன் கிரிராஜன் என்பவரை, தனக்கான வாக்குச்சாவடி முகவராக நியமித்திருக்கிறார்.
மேலூர் அல்-அமீன் பள்ளியில் எட்டாவது வார்டுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து கொண்டிருந்த நிலையில், காலை 8 மணி அளவில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு வருமாறு பாஜக முகவர் கிரிராஜன் கூறியுள்ளார்.
அதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பிற அனைத்துக் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ‘கிரிராஜனை வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றாவிட்டால் அனைத்துக்கட்சி முகவர்களும் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறி விடுவோம்’ என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பாஜக முகவர் கிரிராஜன் வாக்குச்சாவடியில் இருந்த அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, கிரிராஜனை வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டதால், அவர் வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்பு மதியம் 12 மணியளவில் கிரிராஜன் சில நபர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சில கோஷங்களை எழுப்பியுள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், கிரிராஜனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஒரு ரகசிய இடத்தில் வைத்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அங்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.
பாஜக வாக்குச்சாவடி கிரிராஜனின் இந்தச் செயலுக்கு மேலூரில் உள்ள அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், சம்பவத்தைப்பற்றி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஹிஜாப் அணிந்த வாக்காளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எந்த உடையணிந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்களது மத நம்பிக்கையை பின்பற்ற முழுமையான உரிமை உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
– மதுரை வெண்புலி.