உக்ரைனில் சிக்கி தவித்த 10 மாணவ-மாணவிகள் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்!!

உக்ரைனில் போர் நடந்து வருவதால், இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரியில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், உக்ரைனில் இருந்து இந்திய விமானத்தில் வந்த மாணவர்களில் தமிழக மாணவர்கள் 22 பேர் சென்னை வந்தடைந்தனர்.
அதில் கோவை, திருப்பூர், தாராபுரம், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து பின்னர் அங்கிருந்து சென்னை வந்தடைந்து விமானம் மூலம் நேற்று இரவு 8 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தனர்.

அதில் கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 3-ம் ஆண்டு மருத்துவ மாணவிகள் சாய்பிரியா, சூலூர் ஏரோ பகுதியை சேர்ந்த ஜோஷினா ஜோஸ், துடியலூர் பகுதியை சேர்ந்த ஷெர்லின் பியூலா, கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவர் தக்சன்குமார், கோவில்பாளையம் அருகே கொண்டம்பாளையத்தை சேர்ந்த மாணவி தவ்பீன் ரபீக், துடியலூரை சேர்ந்த வெண்மதி ரமேஷ், தாராபுரத்தை சேர்ந்த சிவபாரதி மற்றும் பிரதீபா ராமசாமி, குன்னூரை சேர்ந்த சாய் சோனு உள்பட 10 மாணவ-மாணவிகள் கோவை வந்தடைந்தனர்.

சொந்த நாடு திரும்பியது எப்படி என்பது குறித்து மாணவ- மாணவிகள் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் உதவியால், பத்திரமாக வந்துள்ளோம். நாங்கள் தங்கியிருந்த உக்ரைன் மேற்கு பகுதியில் போர் பதற்றம் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்திலேயே இருந்தோம்.
உணவும் சரியாக கிடைக்காமல் அவதிப் பட்டோம். உக்ரைனில் இருந்து பஸ் மூலம் போலந்து மற்றும் ஹங்கேரி பகுதிகளுக்கு சென்றோம். அப்போது உக்ரைன் எல்லையில் மைனஸ் 0.7 டிகிரி குளிர் நிலவியது எப்படியாவது இந்தியா திரும்ப வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்ததால் குளிரை பெரிதாக கருதவில்லை.
சொந்த ஊர் திரும்பியது மகிழ்ச்சி. இதே போல் தங்களுடன் படிக்கும், பிற கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்களையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts