தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு விழாக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், காரைக்குடியில் இந்துக்களின் விழாவிற்கு ஆதரவாகவும், மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களோடு காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கம். ஒரு வார விரதத்திற்குப் பின், அடுத்து வரும் புதன்கிழமை முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் எடுத்து விரதத்தை முடித்துக்கொள்வார்கள். இதற்காக, காரைக்குடி முத்தாளம்மன் கோவிலில் இருந்து பால்குடத்தை தலையில் சுமந்தும், காவடி எடுத்தும் அம்மன் சன்னதி, செக்காலை ரோடு, நியூசினிமா வழியாக ஊர்வலமாக, முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தபோது, பஜார் பள்ளிவாசல் முன்பாக முஸ்லிம்கள் சாலையில் தண்ணீர் பாய்ச்சி வெப்பம் தணித்தனர். கோடை வெயிலில் சுடச்சுட நடந்து பால்குடம் சுமந்து சென்றவர்களின் பாதங்களை முஸ்லிம்கள் குளிர்வித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகப்பெரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
– பாரூக், சிவகங்கை.