சிங்கம்புணரி பேரூராட்சியில் பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பொது மக்களிடையே பரவலாக கருத்து நிலவி வந்தது.
இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற சிங்கம்புணரி செட்டியார் குளம் புனரமைப்பு துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களின் இல்லம் தேடிச் சென்று வழங்குமாறு பேரூராட்சித் தலைவரிடம் அறிவுறுத்தினார்.
அதன்படி, அந்த நிகழ்வின் பின்பு பதியப்பட்ட பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை மற்றும் விசாரணை செய்து, இன்று நியூ காலனியை சேர்ந்த ராமநாதன் – சினேகா ஆகியோரின் மகள் நிகிதாவிற்கு பிறப்புச் சான்றிதழையும் – வாழ்த்துகளையும்,
கூத்தாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி பாண்டி தேவி மற்றும் அதே தெருவைச் சேர்ந்த மச்சக்காளை என்பவரின் மனைவி வெள்ளைச்சி ஆகியோருக்கு இறப்பு சான்றிதழையும் – ஆறுதலையும் அவர்களது இல்லங்களைத் தேடிச்சென்று சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து மற்றும் துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முஹம்மது, கவுன்சிலர்கள் மணிசேகரன், ஜெயக்குமார் மற்றும் செந்தில் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
– பாரூக், சிவகங்கை.