நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட இருவர்! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள குமிலம் பரப்பை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் உலர் பழங்களை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீ ரமணா (வயது 19). இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்குமார் தொழில் வளர்ச்சிக்காக ரூ.2 கோடி பணம் தேவைப்பட்டது. இந்த பணத்தை கடனாக வாங்குவதற்காக செந்தில்குமாரின் மனைவி தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில், அவருக்கு வக்கீல் ஒருவரின் மூலம் கோவை செட்டிப்பாளையம் சேர்ந்த மார்ட்டின் மற்றும் கவுதம் என்பவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

இதையடுத்து செந்தில்குமாரின் மனைவி, மார்ட்டின் மற்றும் கவுதமிடம் தனது கணவரின் தொழிலுக்காக ரூ.2 கோடி கடன் தேவைப்படுவதாக தெரிவித்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவரிடம், கவுதம் தான் ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.25 லட்சமும், மார்ட்டினுக்கு ரூ.1 லட்சமும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் தனது கணவர் செந்தில்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது கணவரும் கடன் பெற சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி கவுதம், செந்தில்குமாரின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் கேட்ட ரூ.2 கோடி கடன் தொகையை ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து பெற்று தயாராக வைத்துள்ளேன். நீங்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து முன்பணம் ரூ.25 லட்சத்தை வழங்கிவிட்டு ரூ.2 கோடியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில்குமாரின் மனைவி, தனது மகன் ஸ்ரீரமணாவிடம் ரூ.25 லட்சத்தை கொடுத்து, இந்த பணத்தை கவுதமிடம் கொடுத்துவிட்டு, ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு வா சென்று கூறி அனுப்பினார். மேலும் அந்த பெண் கவுதமை தொடர்பு கொண்டு தனது மகனிடம் கடன் தொகை ரூ.2 கோடியை கொடுத்து அனுப்புமாறும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீ ரமணா காரில் ரூ.25 லட்சத்துடன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தார். அப்போது அங்கே நின்ற கவுதம் மற்றும் மார்ட்டின் ஒரு பெரிய அட்டைப்பெட்டியை காண்பித்து நீங்கள் கேட்ட பணம் ரூ.2 கோடி இதில் உள்ளது.
பத்திரமாக எடுத்து செல்லவும் என்று கூறி அந்த அட்டைப்பெட்டியை ஸ்ரீ ரமணா காரில் வைத்தனர். பின்னர் ஸ்ரீ ரமணாவிடம் இருந்து ரூ.25 லட்சத்தை பெற்றுக்கொண்ட கவுதமும், மார்ட்டினும் காரில் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து ஸ்ரீ ரமணா அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் டூத் பேஸ்ட், பிரஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீரமணா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் இந்த நூதன மோசடி குறித்து ஸ்ரீ ரமணா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் மார்ட்டின், கவுதம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அட்டைப்பெட்டியில் ரூ.2 கோடி இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp