தூத்துக்குடி விமானத்தில் பாஜக ஆட்சியை விமர்சித்ததாக ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், அதற்காக அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ல் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணித்துள்ளார். அப்போது அவர், விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்ததும், “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என கோஷம் எழுப்பியதால் விமானத்திலும், விமான நிலையத்திலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தினரால் கைதுசெய்யபட்ட சோபியா பின்னர் பிணையில் வெளிவந்தார்.
இந்நிலையில், சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்த புகாரில், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யா பதற்ற நிலையை தணிக்க முயன்றபோதும், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை தங்களை காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், விசாரணை என்ற பெயரில் மதியம் முதல் இரவு வரை தன் மகளை கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு நீதிபதி முன் நேர் நிறுத்தப்பட்டபோது, அடிவயிற்று வலியால் தனது மகள் பாதிக்கப்பட்டதாகவும், பொய் வழக்கு மூலம் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். அந்தப் புகார் மனுவை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரித்தபோது, காவல்துறை தரப்பில் விமான நிலைய இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்ததாகவும், மனித உரிமை மீறல் ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், சோபியா மீதான குற்றச்சாட்டுகள் சரியா? தவறா? என்பதை குற்றவியல் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமென்றாலும், அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் சோபியா கைது மற்றும் விசாரணையின்போது அவரிடம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, பாதிக்கபட்ட சோபியாவிற்காக அவரது தந்தை ஏ.ஏ.சாமிக்கு ₹.2 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலையிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயையும் மற்ற காவல் துறையைச் சேர்ந்த 6 நபர்களிடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சோபியாவிற்கான இழப்பீடு ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டுமெனவும் தனது உத்தரவில் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது, காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது என உரிய அறிவுறித்தல்களை வழங்கும்படி தமிழ்நாடு டிஜிபி-க்கும் அறிவுறுத்தியுள்ளார்.
– பாரூக்.
One Response
நீதி இன்நும் சாகாவில்லை சூப்பர்