மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் – மனைவி சபரி தம்பதியின் 17வயது மகள் கடந்த மாதம் 14ம் தேதி, வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியைத் தேடினர். விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவுடன் சிறுமி பழகி வந்ததும், அவருடன் சிறுமி சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், மயக்க நிலையில் இருந்த சிறுமியை, அவரது தாயார் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, சிறுமியை கடத்திச்சென்றதாக நாகூர் ஹனிபாவை தனிப்படை காவல்துறையினர் 5ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை காதலித்து வந்ததாகவும், பிப்.14ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் உள்ள நண்பர் பெருமாள்கிருஷ்ணனின் வீட்டிற்கு, நண்பர்களின் உதவியுடன் சிறுமியை கடத்திச்சென்றதாகவும், அடுத்த நாள் அங்கிருந்து ஈரோடு பள்ளிபாளையத்தில் உள்ள சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்குச் சென்று, அங்கு தங்கியிருந்ததாகவும் நாகூர் ஹனிபா தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் நாகூர் ஹனிபாவும், சிறுமியும் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர். ஆனால், நாகூர் ஹனிபா அதைச் சாப்பிடாமல் துப்பியுள்ளார். அந்தச் சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை சொல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதன்பின்பும் இருவரும் தும்பைப்பட்டி வந்த நிலையில், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை நாகூர் ஹனிபாவின் தாயார் அழைத்து வந்து, பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியை கடத்த உதவியாக இருந்த மதுரையை சேர்ந்த பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள்கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது மற்றும் சாகுல்ஹமீது ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், அத்தை ரம்ஜான் பேகம், உறவினர் ராஜாமுகமது ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘நாகூர் ஹனிபா, ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் சிறுமியுடன் வாழ்ந்துள்ளார். கடத்தல் தொடர்பாக மேலூர் காவல்துறையினர் போக்சோ சட்டம் உள்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது சிறுமி இறந்து விட்டதால் அது, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனைப்படி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை. போதை மருந்து உட்கொள்ளவில்லை. எனவே, தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மேலும், “போக்சோ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ எந்த ஊடகத்திலும் பதிவு செய்யக்கூடாது மற்றும் சமூக வலைத் தளங்களிலோ பகிரவும், பதிவேற்றம் செய்யவும் கூடாது” எனவும், “சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்” எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி கடத்தல் விவகாரத்தில் சிறுமியின் கையில் இருந்து ஊசி போடப்பட்ட இடத்தை சுட்டிக்காட்டி போதை மயக்க ஊசி செலுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறி சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், சிறுமி எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், திருப்பூரில் சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போது கையில் குளுகோஸ் செலுத்துவதற்காக ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம் கையில் இருந்ததாகவும், சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்படவில்லை எனவும் மருத்துவ அறிக்கை கூறியுள்ளதாக மாவட்ட காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்கள் மேற்கொண்ட சாலைமறியலின் காரணமாக, அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து மூன்று மணி நேரமாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போது அங்கு வந்த மூவேந்தர் முன்னேற்றக்கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தினார். அதனை ஏற்க மறுத்து, தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தும்பைப்பட்டியில் நடந்த மறியலின்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அரசுப் பேருந்தின் மீது 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், கல் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அயிலா, லக்சிதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தும்பைப்பட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
– மதுரை வெண்புலி.