மேலூர் அருகே பள்ளி மாணவியின் மரணத்தில் நடந்தது என்ன? மதுரை மாவட்ட காவல்துறையின் அறிக்கை..!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் என்பவரது மனைவி சபரி, மேலூர் காவல் நிலையத்தில், ‘தான் தும்பைப்பட்டி கிராமத்தில், தன் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும், தனது மகள் கடந்த 14.2.2022 தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை’ என்று மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15.2.22ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். மேலும், சபரி, வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால் தன்னுடைய மகளின் விபரம் பத்திரிக்கையில் வந்துவிடும் எனக் கருதி, மனு ரசீது மட்டும் கேட்டுக்கொண்டார். எனவே, மேலூர் காவல் நிலையத்தில் மனு ரசீது கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது வந்தது.

விசாரணையில், காணாமல் போன பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவரை காதலித்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 3.3.2022 ஆம் தேதி காலை தும்பை பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் என்பவர் காணாமல் போன அந்தச் சிறுமியை, மயக்க நிலையில் அவருடைய தாயார் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். உடனே சிறுமியின் தாயார் தனது மகளை மேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.
அங்கு மருத்துவரின் ஆலோசனை பேரில் அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி மயக்க நிலையில் இருந்ததால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக உடனடியாக விசாரணை செய்து நாகூர் ஹனிபா மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 3 தனிப்படைகளில் ஒரு தனிப்படையினர் திருப்பூருக்கும், மற்றொரு தனிப்படையினர் சென்னைக்கும், மற்றொரு தரப்பினர் மதுரைக்கும் விரைந்தனர்.
இந்நிலையில், நேற்று தனிப்படையினர் தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபாவை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் நாகூர் ஹனிபா அந்தச் சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 14. 2.2022 தேதி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு சில நண்பர்களின் உதவியால் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


பின்னர் நாகூர் ஹனிபாவின் தாயார் ‘அந்தப் பெண்ணை நீ தான் கூட்டி சென்றதாக ஊருக்குள் பேசிக் கொள்வதாகவும், நிச்சயமாக இது சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்’ என்றும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, காவல்துறை தன்னை தேடுவதை அறிந்த நாகூர் ஹனிபா, எலி பேஸ்ட் வாங்கி வந்து, இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என சிறுமியிடம் கூறி எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளனர் . ஆனால், நாகூர் ஹனிபா அதை சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளார். அந்த சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை சொல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு கையில் டிரிப் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே நாகூர் ஹனிபா சிறுமியை தும்பைப்பட்டி அழைத்து வந்து தன்னுடைய தாயார் மதினாவிடம் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் காலையில் மதினா பேகம் சிறுமியின் வீட்டருகே யாருக்கும் தெரியாமல் விட்டுச் சென்றுள்ளார். தற்போது சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் என்ற விவரம் தெரிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை ஆராய்ந்து அளித்துள்ள அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகப்படவில்லை என்றும், சிறுமியின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பள்ளிபாளையத்தில் தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபாவை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை சென்னையில் வைத்தும், பெருமாள், ராஜா முகமது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை கைது செய்து மேலூர் அழைத்து வந்துள்ளனர்.

அதேபோல் நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தாய்மாமா மனைவி ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் மற்றும் அவரது உறவினர் ராஜாமுகமது ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் உள்ள 10 குற்றவாளிகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இவ்வழக்கில் நாகூர் ஹனிபாவுக்கு உதவிய 2 நபர்களை கைது செய்ய தனிப்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதில் இருவேறு சமூகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பயன்படுத்தி சிலர் சமூகப் பதட்டத்தை உருவாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

– மதுரை வெண்புலி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp