ஆனைமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம் ‘நரிக்கல்பதி’. இக்கிராம மாணவ மாணவிகள் கபடி விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள். நாட்டின் பல பாகங்களுக்கு சென்று வெற்றி வாகை சூடி வந்துள்ளார்கள்.
மலசர் பழங்குடிகளும், பட்டியல் இன மக்களும் அதிகமாக வசிக்கும் இக்கிராமத்திற்கு போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதியும் கிடையாது. மலையடிவார கிராமத்தில் எப்படி சாத்தியமாகிறது? மணிகண்டன் இதற்கு முக்கிய வழிகாட்டியாக, பயிற்சியாளராக இருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள்.
கபடி வீரர்கள் ஊரின் முன்னாடி உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தினமும் பயிற்சிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறார். இருபாலரிலும் சப்- ஜுனியர், ஜுனியர், சீனியர் பிரிவுகளில் மொத்தம் 6 அணிகள். அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் காலை முதல் இரவு வரை அந்த பயிற்சி நீடிக்கிறது.
இன்று எளிய அடித்தட்டு கிராமப்புற மாணவர்களின் உடல் வலிமை பெரும்பாலும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தபடாமல் பயனற்று போகிறது. ஆனால் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் போது இந்த எளிய மாணவ செல்வங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தியது நரிக்கல்பதி.
இவ்வளவிற்கும் பயிற்சியாளர் மணிகண்டன் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் அல்ல. தான் பயின்ற பள்ளி, ஐ.டி.ஐ. யில் கபடி விளையாடிய வீரர் அவ்வளவே. அன்றாடம் கூலி வேலை செய்து கொண்டு ஊரிலுள்ள மாணாக்கர்களை அனைவரையும் ஒன்று சேர்த்து ஒருநாள் கூட தவற விடாமல் நேர்த்தியாக விளையாட வைக்கிறார். மிகுந்த ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும், அற்பணிப்போடும் வளர்த்து எடுக்கிறார். தனக்கு தெரிந்த விசயங்களை கற்றுத் தருகிறார்.
சமூக ஊடக குழுக்களின் வாயிலாக கபடி போட்டிகள் குறித்த விவரங்களை அறிந்து நண்பர்கள், நல் உள்ளங்கள் பங்களிப்போடு தனது வருமானத்தில் இருந்து பெரும் பகுதியையும், விளையாட்டு வீரர்களிடம் இருந்து சிறிதளவு தொகையை வசூல் செய்து கிடைக்கின்ற பேருந்துகள் அல்லது வாடகை வாகனங்களில் சென்று போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்புகிறார்கள். எல்லோரையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்குகிறார் மணிகண்டன்.
சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர். பழனிக்குமார் அவர்கள் முகநூலில் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். இந்தியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உடற் கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும் இல்லை.
விளையாட்டு பயிற்சியும் இல்லை. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எப்படி பயிற்சி அளிக்க முடியும்? அப்படியானல் தேசிய/மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேர்வு யாருக்கானது? விளையாட்டு விடுதித்தேர்வும் யாருக்கானது?
இந்த கேள்வியை யோசித்துப் பார்க்கும் போது சகோதரர் மணிகண்டனை போன்ற நல்ல உள்ளம், திறமை கொண்ட ஒவ்வொரு கிராம இளைஞர்களும் தங்கள் கிராமங்களில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களின் விளையாட்டு திறனை வெளியே கொண்டுவர இதுபோன்ற முன்னெடுப்புக்களை செய்தால் மட்டுமே இப்போதைக்கு சாத்தியம்
என்று உறுதியாக நம்புகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.