எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்?

தகவல் தொழில்நுட்பம் காலத்தின் பரிணாம வளர்ச்சி அதன்விளைவு அனைவரும் கைகளிலும் சரளமாக செல்போன் பயன்பாடு.
அதிலும் கடந்த 2 ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு மாணவர்களிடம் கட்டாயம் செல்போன்களை பெற்றோர்களே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கல்வி கற்றலுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள் கையில் கூட செல்போன் கொடுக்கப்பட்டதால் பள்ளி பாடத்திட்டத்திற்கு மட்டுமல்லாமல் விளையாடுவதற்கும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
2 வருட பள்ளி நேரடி வகுப்பு தடைபட்டதால் மாணவர்களின் பழக்க வழக்கமும் மாறிவிட்டது. மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் முதல் எல்.கே.ஜி. குழந்தைகள் வரை செல்போனுக்கு அடிமையாகி எந்நேரமும் அதில் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது. பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கொரோனா நோய் தகர்த்தெறிந்து விட்டதன் மூலம் இப்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன்களை கொண்டு செல்கின்றனர்.
பெற்றோருக்கு கீழ்படியாமல், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் வகுப்பறைகளில் மாணவர்கள் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவு மிகமோசமான நிலைக்கு பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதை கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் சமூக வலைதளம் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.

பாட புத்தகங்களை சுமக்க வேண்டிய மாணவர்கள் கையில் ஆயுதங்களும், செல்போன்களும் புழங்குவது அதிர்ச்சியூட்டுகின்றன. கஞ்சா, மது பழக்கங்களுக்கும் அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த மாதம் அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் சமீபத்தில் வெளியானது. தலை முடியை ஒழுங்காக வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை உணர்த்துகிறது.

குருவாக, ஆசானாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை இன்றைய மாணவர் சமுதாயம் எதிரியாக பார்க்க காரணம் என்ன? அன்பையும், பண்பையும் விதைத்து நல்வழிப்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோராக கருதப்படுகிறார்கள்.
ஒரு மாணவருக்கு தாய், தந்தை முதல் பெற்றோரும், 2-வது பெற்றோர் ஆசிரியர் என்று போற்றக்கூடிய நம் நாட்டில் மாணவர்கள் அத்துமீறி செல்வதற்கான காரணம் என்ன என்று கல்வியாளர்கள் ஆராய்கிறார்கள். இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு நேரத்தில் இத்தகைய செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள நம் பள்ளியில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? செல்போன் மதிமயக்கத்தில் இன்றைய மாணவர் சமுதாயம் கிரங்கி கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வகுப்பறையில் இருக்கையை மாணவர்கள் சேதப்படுத்தி அதனை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ள மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் ‘ராகிங்’ செய்த சம்பவம் பெற்றோர்களை மிரள வைத்துள்ளது.
வகுப்பறையில் 3 மாணவர்கள் தாதா போல உட்கார்ந்து இருக்க 10 பேர் அவர்களுக்கு தேர்வு அட்டையால் காற்று வீச செய்யச்சொல்லி ராக்கிங் செய்துள்ள வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு மாணவரை பளார் என்று கன்னத்தில் அறையவும் செய்கிறார் மூத்த மாணவர்.
கல்லூரிகளில் தான் ராகிங் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ராகிங் செய்வது புதுமையாக உள்ளது. பள்ளி பருவ மாணவர்கள் ஆசிரியர்களிடமும், வகுப்பறையிலும் ஒழுங்கீனமாக நடக்கும் செயல் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக மாறிவிடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளி மாணவர்களை வழிநடத்தக்கூடிய கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மாணவ- மாணவிகள் தடம்மாறி செல்வதை தடுக்க கூடிய நடவடிக்கை உடனடியாக தேவை என்பதையும் ஆசிரியர்கள் அச்சமின்றி பாடம் நடத்துவதை உறுதிப்படுத்தவும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp