குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கல்லுாரிகளுக்கு வெளியே தங்கியிருக்கும் மாணவர்களின் விவரங்களை, கோவை மாநகர போலீசார் சேகரித்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள் மிகுந்துள்ள கோவையில், உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், அந்தந்த கல்லுாரி விடுதிகளில் தங்கியிருப்போர், தினமும் வீட்டில் இருந்து கல்லுாரிக்குச் சென்று வருபவர்களால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படுவதில்லை.
கல்லுாரிகளுக்கு வெளியே அறை மற்றும் வீடுகள் வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருப்பவர்களால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். கல்லுாரி நிர்வாகத்தின் கட்டுப்பாடு, பெற்றோரின் கண்டிப்பு என, எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக வெளியே தங்கியிருக்கும் இம்மாணவர்கள், சமூக விரோதிகளுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றனர்.
மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி நாளடைவில் திருட்டு, அடிதடி, கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்களிலும் இத்தகைய மாணவர்கள் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர். சமீபத்தில், கோவையில் நடந்த பல குற்றச்சம்பவங்களில், கல்லுாரிகளுக்கு வெளியே தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது மாநகர போலீசாரால் கண்டறியப்பட்டது.
இதற்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்துடன், கல்லுாரிகளுக்கு வெளியே வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த கல்லுாரிகள் மூலமாக ஒரு வழியிலும், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்போர் அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாகிகள் மூலமாக இன்னொரு வழியிலும், விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள், வெளியே தங்கியிருக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உதவிகரமாக இருக்கும் என, போலீசார் கருதுகின்றனர்.
அது மட்டுமின்றி, ‘எப்படியோ வாடகை வந்தால் போதும்’ என்ற எண்ணத்தில், மாணவர்களுக்கு குடியிருப்பு வழங்கி விட்டு, அவர்களது சட்ட விரோத செயல்களை கண்டும் காணாமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு ‘செக்’ வைக்கவும் போலீசார் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.