சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சித்திரை பௌர்ணமி நாளை முன்னிட்டு சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் சார்பாக 81ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலின் உள்ளேயே விழா நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதால் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சிங்கம்புணரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவின் தொடக்கமாக இன்று காலை பக்தர்கள் பால்குட ஊர்வலம் சீரணி அரங்கிலிருந்து தொடங்கியது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலம் பெரியகடைவீதி, வேங்கைப்பட்டி சாலை வழியாக கோவிலை அடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்து தொட்டியில் பக்தர்கள் பாலை ஊற்றினர். பின்பு மின்மோட்டார் மூலம் பம்பு செய்யப்பட்டு சித்தருக்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தீபாரதணைகள் காண்பிக்கப்பட்டது. இதனிடையே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5மணிக்கு பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்ய உள்ளனர். மாலை 8 மணியளவில் கோவில் வளாகத்தில் மேளதாளத்துடன் நாதஸ்வர கச்சேரியும், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.
நள்ளிரவில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்குத் தேரில் சித்தர் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
சிங்கம்புணரி காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.