சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கருதாவூரணி கண்டதேவி சாலையில் அழகப்பன் என்பவரது வீடு உள்ளது. இவரது மனைவி ராசு. இவர்கள் இருவரும் அடிக்கடி தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.
இவ்வாறு இவர்கள் வெளியூர் செல்வதால், வட்டப்பன் என்ற காவலாளியை வைத்து, அந்த வீட்டை காவல் காத்து, பராமரிக்கச் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அழகப்பன் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இரவு நேரத்தில் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஆகையால், வீட்டின் காவலாளி வட்டப்பன் அதனை தட்டிக் கேட்டுள்ளார்.
அங்கு மது அருந்தியவர்கள் வட்டப்பனின் இந்த செயலால் ஆத்திரமடைந்து அவர்கள் மது அருந்திய பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீட்டினுள் எரிந்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த வீட்டின் காவலாளி பலத்த தீக்காயமடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து விரைந்து வந்து வட்டப்பனை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் அழகப்பன் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியை முழுவதுமாக ஆராய்ந்து வழக்குப் பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
– பாரூக், சிவகங்கை.