கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம். இவர் ஒரு தொழிலதிபர். சிவகுரு குற்றாலம் நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராமதாஸ் என்பவரிடம் நிலம் வாங்குவற்காக ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவுக்கு முன்பு அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பணத்தைத் திரும்பகேட்டுள்ளார் சிவகுரு குற்றாலம். ராமதாஸ் பணம் கொடுக்க தயங்கியுள்ளார். பணம் கொடுக்காமல் இருந்தால் பணத்துக்கு ஈடாக வேறு நிலத்தையாவது கொடுக்கும்படி சிவகுரு குற்றாலம் கேட்டிருக்கிறார். பணமும் கொடுக்காமல், நிலமும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் ராமதாஸ். இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார் சிவகுரு குற்றாலம்.
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புகார், மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி தங்கவேலு இதுபற்றி விசாரணை நடத்தியிருக்கிறார். அந்த சமயத்தில் ராமதாஸ் வேறு நிலத்தை சிவகுரு குற்றாலத்துக்கு எழுதிகொடுத்துள்ளார். இதையறிந்த டி.எஸ்.பி தங்கவேலு, தான் தலையிட்டு விசாரணை நடத்தியதால்தான் அவர் நிலம் எழுதி கொடுத்திருக்கிறார். எனவே, தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர் பாலிடம், சிவகுரு குற்றாலம் புகார் அளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ஐந்து லட்சம் ரூபாயை சிவகுரு குற்றாலத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்குச் சென்று டி.எஸ்.பி தங்கவேலுவிடம் ஐந்து லட்சம் ரூபாயை சிவகுரு குற்றாலம் கொடுத்திருக்கிறார். பணம் வாங்கும் சமயத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி தங்கவேலுவை கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர்பால் தலைமையில் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி, லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி தங்கவேலுவை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் லஞ்சம் வாங்கியதால் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– பாரூக்.