ஐ.பி.எல் கிரிக்கெட்டை, கட்டணமில்லாமல் பார்க்க ஒரு செயலியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட சிவகங்கை வாலிபரை, ஹைதராபாத் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(29). இவர் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை
கட்டணமின்றி ஒளிபரப்பு செய்வதற்காக தனியாக செயலி ஒன்றை தயாரித்து, உரிய அனுமதி பெறாமல் அதன்மூலம் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்துவந்துள்ளார்.
2018 முதல் 2022 வரை நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ₹.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மோசடியாக தனது செயலி மூலம் ஒளிபரப்பு செய்துள்ளார் ராமமூர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களின் விளம்பரங்களும் இந்த ஒளிபரப்பில் வெளியாகின.
தங்களுக்குத் தெரியாமல், விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு செய்தது குறித்து ஸ்டார் டிவி நிர்வாகியான ஹைதராபாத்தை சேர்ந்த கடாரம் துப்பா(36) என்பவர், அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையில் 2021ல் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனடிப்படையில் விசாரணை செய்த ஐதராபாத் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் ரவீந்தர் தலைமையில் காவலர்கள் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகியோர் சிவகங்கை வந்து ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகங்கை ஜே எம்1 நீதிமன்றத்தில் நேர் நிறுத்திய பின்னர் ஹைதராபாத் அழைத்து சென்றனர்.
– ராயல் ஹமீது.