கோவை நகரில், புதுப்பிக்கப்படும் ரோடுகளில் ‘மில்லிங்’ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன், பழைய ரோடுகளில் அளவுக்கு அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், ரோட்டின் உயரம் அதிகமாகி, வீடுகள் பள்ளங்களாக மாறியுள்ளன. மில்லிங் செய்யாமல் அமைக்கும் ரோடுகளால், ரோட்டில் இருந்து வீட்டுக்கு படியேறிச்சென்ற நிலை மாறி, வீட்டிலிருந்து மேடாகவுள்ள ரோட்டுக்கு ஏறிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது.இது இப்படியிருக்க, கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு ரோடுகளிலும், வேகத்தடை என்ற பெயரில், பெரிய பெரிய மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடியிருப்புகளுக்கு நடுவில் செல்லும் ரோடுகளில், அளவுக்கு அதிகமான எண்ணிக்கையிலும், மிகப்பெரிய உயரத்திலும் வேகத்தடைகளை அமைத்திருப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அடையாளம் தெரியாத இந்த வேகத்தடைகளில், டூ வீலர்கள் விபத்துக்குள்ளாகின்றன; சிறிய கார்கள் பழுதாகின்றன. கோவையில் ரோடுகளில் ‘மில்லிங்’ செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் மாநகராட்சி நிர்வாகம், நகருக்குள் தேவையற்ற இடங்களிலும், அதீத உயரத்திலும் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்; அல்லது உயரத்தைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.
தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் இன்னும் சிலர் தாங்களாகவே தங்கள் வீடுகளுக்கு முன்னால் வேகத்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் இதைக் கண்டறிந்து ஆற்ற வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.