சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 25-ந் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கியது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த 15 பேர்களை நேற்று காலை ஓட்டுநர் சிராஜூதின் சுற்றுலா வேனில் அழைத்துக்கொண்டு ஏற்காடு வந்தார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு பின்னர் நேற்று மாலை குப்பனூர் மார்க்கமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இந்த நிலையில் குப்பனூர் வழியில் இருக்கும் கொட்டச்சேடு முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்த பாறை மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவ்வழியே வந்த சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் ஏற்காடு காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த ரிஸ்வானா (24) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் வேனுக்குள் சிக்கிய 14 பேரை மீட்டு ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நஜியா (26) என்ற பெண் உயிரிழந்தார் இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். விபத்து குறித்து ஏற்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.