மோசடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனே சைபர்கிரைம் போலீசாரை அணுக வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இது குறித்து, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு
வேலை வாங்கி தருவதாக கூறி ‘ஆன்லைன்’ வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம்.
மொபைல் போனுக்கு வரும் தவறான ‘லிங்கை’ தொடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும்போது, யாராவது தானாக உதவுவதாக கூறினால், மறுத்து விடவும்.
கஸ்டமர் கேர் எண்களை கூகுளில் தேடும் போது கவனம் தேவை. தவறான எண்களை தொடர்பு கொள்வதன் வாயிலாக, ஏமாறும் வாய்ப்பு அதிகம்.
பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்த்தல் நல்லது.
ஓ.எல்.எக்ஸ்., வாயிலாக, மிலிட்டரியில் பணிபுரிவதாக கூறி, பொருட்களை குறைந்த விலையில் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்.
‘ஆன்லைன் டேட்டிங் அப்ளிக்கேஷன்’ வாயிலாக பழக்கமாகும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ‘வீடியோ கால்’ வாயிலாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்ணுக்கு, வெகுநேரமாக நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கி கணக்கை முடக்கிக் கொள்வது நல்லது.
உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில், போலியான முகநூல் கணக்கு உருவாக்கி, அதன் வாயிலாக, அவசர தேவைக்காக பணம் கேட்கலாம். கவனம் தேவை.
தங்கள் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க உள்ளோம் என்று யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம்.
ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, ஓ.டி.பி., மற்றும் இதர வங்கி தகவல்களை பகிர்தல் கூடாது.
வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடப்பட்டது தெரிந்தால், உடனடியாக, 155260 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகாரை, cypercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன.