ஞானவாபி பள்ளிவாசல் விவகாரம்! நடப்பது என்ன?

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில், இந்து கடவுள்களின் உருவம் இருப்பதால் அவற்றை வழிபட உரிமை வேண்டும் என்று 5 பெண்கள் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.

இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் இந்தக் கள ஆய்வுக்கு பள்ளிவாசல் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரு நாள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கள ஆய்வில் பள்ளிவாசலில் உள்ள உளூ செய்யும் இடத்தில் (தொழுகைக்கு முன்பு முகம், கை மற்றும் கால்கள் சுத்தம் செய்யும் தண்ணீர் தடாகம்) உள்ள செயற்கை நீரூற்றுக்கான கல்லைக் காட்டி, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கின் மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஜெயின் என்பவர், தனக்குப் பதிலாக அவரது மகன் விஷ்ணு ஜெயினை களஆய்வின் பார்வையாளர்களில் ஒருவராக அனுப்பியிருந்தார். வழக்கறிஞர்கள் மற்றும் 52 பார்வையாளர்களும் தம் கைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

இச்சூழலில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவசரமாக அவரிடம் பேச வேண்டும் எனவும் கூறி, கள ஆய்வின் அதிகாரி ஒருவரின் கைபேசியை விஷ்ணு ஜெயின் வாங்கியுள்ளார். அதில் உளூ தடாகத்தையும், அதிலிருந்த செயற்கை நீரூற்றுக்கான கல்லையும்
படம் எடுத்து, அதைத் தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.


அவரது தந்தை, அந்தப் படத்தில் உள்ள கல், சிவலிங்கம் என நீதிமன்றத்தில் காண்பித்ததைத் தொடர்ந்து, முழுமையான ஆய்வறிக்கை வருவதற்கு முன்பே உளூ தடாகத்தை சீல் வைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதில் உரிமையியல் நீதிபதி, சட்டவிதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாகச் செயல்பட்ட வழக்கறிஞரின் மகன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
உளூ செய்யும் தடாகத்தின் மத்தியப் பகுதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல, அது நீரூற்றுக்கான கல் என்ற முஸ்லிம் தரப்பின் வாதத்தை, நீதிபதி முற்றிலும் நிராகரித்தார். முஸ்லிம் தரப்பின் ஆட்சேபணைக்கு செவிசாய்க்காமல் ஒருதலைபட்சமாக பள்ளிவாசலின் உளூப் பகுதியை சீலிட்டு மூட கீழமை உரிமையியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இப்பிரச்சினையில் கடந்த 1937ல் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், தற்போது கியான்வாபி வளாகம் முழுவதும் பள்ளிவாசலுக்கு சொந்தமானது எனவும், அதனுள் முஸ்லிம்கள் தொழுகை நடத்த முழு உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதிலும், கோயிலுக்கானது மற்றும் பள்ளிவாசலுக்கான நிலஅளவுகள் எவ்வளவு என்பதையும் நீதிமன்றம் அப்போது முடிவு செய்தது. அதேசமயம், தற்போதுள்ள உளூ செய்யும் இடம் முஸ்லிம்களின் வஃக்பு சொத்தாகவும் நீதிமன்றம் ஏற்றிருந்தது.

சுதந்திர இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள் “ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்ததைப் போலவே இருக்க வேண்டும், எந்த மதப் பிரிவின் புனிதத்தையும் யாரும் மாற்றியமைக்கக் கூடாது” என்று வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 வலியுறுத்துகிறது. இந்த சட்டத்தை மீறி இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் பள்ளிவாசல் வழக்கில் மாவட்ட நீதிபதி ஒருவர் வழங்கிய சட்டவிரோத தீர்ப்புதான் பிரச்சினையின் மூலமாக விளங்கியது. அதேபோன்ற ஒரு நிலைதான் இந்த வழக்கிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் தீவிர இந்து வலதுசாரிகள் பெற்ற வெற்றியை அடுத்து, தற்போது அவர்கள் மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அவற்றைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டத் துவங்கியிருப்பதாக சமூக நல்லிணக்கத்தை விரும்பும் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

சிவகங்கை மாவட்ட நிருபர்

– பாரூக்.   

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp