தர்மபுரி அருகே லஞ்சத்தில் திளைத்த கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்! உதவியாளருக்கும் சிக்கல்!

    தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்கள் ₹.5000 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மனுக்களை பரிந்துரை செய்வதாகவும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு ₹.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், அவர்களை நீண்ட நாட்கள் அலைக்கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் கேட்டதால் ₹.6000 பணம் கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத காலமாக அளவீடு செய்ய வராததால், அவரை பரசுராமன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது பேசிய கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் அளவீடு செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக் கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் தெரிவித்துள்ளனர். லஞ்சத்திற்கு எதிரான நோட்டீஸ்களை கிராமம் முழுவதும் இளைஞர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்சம் பெறுகின்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஜெயந்தி இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய தொடர்பான ஆடியோ குறித்து விசாரணை நடத்த, அரூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். கோட்டாட்சியர் முத்தையன் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

எனவே, சில்லாரஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் முத்தையன் உத்திரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தியும் பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

– ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp