கோவை சுந்தராபுரம் – மதுக்கரை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் நிறுவனங்கள் அமைத்திருந்த 81 பேருக்கு, 15 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், படுமோசமாகவுள்ள ரோடுகளில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 16 ரோடுகளைச் சீரமைக்க, ரூ.140 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, ‘ஒர்க் ஆர்டர்’ வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின், ரோடு சீரமைப்புப் பணிகள் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.சீரமைக்கப்படவுள்ள 16 ரோடுகளில், மிக மோசமாக இருக்கும் சுந்தராபுரம்-மதுக்கரை ரோடும் ஒன்றாகும். இந்த ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்புப் பகுதியிலிருந்து, 1.8 கி.மீ., துாரத்துக்கு ரோடு மேம்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 10.2 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள, இந்த மேம்பாட்டுப் பணியில், தற்போது இரு வழிப்பாதையாகவுள்ள ரோடு, நான்கு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது. இதில் 1.8 கி.மீ., துாரத்துக்கும் சென்டர் மீடியனுடன், 15.6 மீட்டர் அகலத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, சாத்தியமுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகாலுடன், சிறுபாலம் (கல்வெர்ட்) ஒன்றும் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே இந்த ரோடு படுமோசமாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மிகவும் மோசமாகி ஆபத்தான ரோடாக மாறியுள்ளது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக, ரோடு விரிவாக்கப்பணியை முடிக்க வேண்டுமென்று, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் ரோடு சீரமைப்புப் பணிகளைத் துவங்குவதற்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலைத்துறையின் இடம், பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில், ரோடு விரிவாக்கத்துக்காக நிலத்தை அளந்து, குறியீடுகள் வரையப்பட்ட போதுதான் இது தெரியவந்தது. சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை செல்லும் ரோட்டின் இடது புறத்தில், 400 மீட்டர் துாரத்துக்கு 32 ஆக்கிரமிப்புகளும் வலது புறத்தில் 1200 மீட்டர் துாரத்தில் 49 ஆக்கிரமிப்புகளுமாக மொத்தம் 81ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை அகற்றுவது தொடர்பாக, கடந்த 11ம் தேதியன்று, டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர். கடந்த 13ம் தேதியன்று, இவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் அவகாசம் வழங்கி, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கெடு, வரும் 28ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் தரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அவரவர்களே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. இல்லாதபட்சத்தில், மே 30லிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பணிகள் முடிந்தபின், ரோடு சீரமைப்புப் பணி, ஜூன் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.