“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள 24 கிராமங்களுக்கு சொந்தமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்கள் முன்பு, கோவிலில் பூஜை நடத்தி விட்டு மாலை 8 மணியளவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அடுத்தநாள்வழக்கம்போல் அதிகாலையில் கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்துள்ளது. இதனையடுத்து பூசாரி, கோவில் அறங்காவலருக்குத் தகவல் தெரிவிக்க, உடனடியாக கோவில் அறங்காவலர் செல்லையா கண்டவராயன்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த காவல்துறையினர் உண்டியல் உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருட வந்த மா்ம நபா், சட்டை அணியாமல் கையில் உறை மற்றும் முகமூடியணிந்து உள்ளே சென்றவுடன், கண்காணிப்புக் கேமராவை வேறு திசையில் மாற்றி விட்டு, உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மாவட்ட கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவிகொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் 24 கிராம மக்களும் நேர்த்திக்கடனாக தங்கத்தில் தாலி, வெள்ளியில் கண், கும்பம் போன்ற நகைகளையும் இக்கோவிலில் செலுத்துவார்கள். அதனால் கண்டிப்பாக உண்டியலில் நகைகள் மற்றும் பணம் அதிகமாக இருந்திருக்கும். எனவே, அவை அனைத்தும் திருடு போயிருப்பதாக மிகுந்த வேதனையுடன் கிராம மக்கள் கூறுகின்றனர்.
கடந்த பத்து மாதத்திற்கு முன்பு ஒருமுறை இதே போல் திருட்டு நடைபெற்ற நிலையில் அது குறித்த விசாரணைை நடைபெற்று வந்த நிலையில் அதே போல் மறுபடியும் திருட்டு நடைபெற்றிருப்பது இப்பகுதி கிராம மக்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் சிசிடிவி கேமரா முதலிய கண்காணிப்பு சாதனங்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக திருடர்கள் இவ்வளவு துணிச்சலாக செயல்பட்டு வருவது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.