சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி காயத்ரி (39). இந்தத் தம்பதியருக்கு, நித்யஸ்ரீ (13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததாலும், அவரது உறவினர்கள் செல்லிடப் பேசியில் அழைத்தபோது, யாரும் எடுக்காததாலும் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தாம்பரம் காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரகாஷ், காயத்ரி மற்றும் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டனர். பின்னர் நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையில், `இந்த முடிவு குடும்பத்தினரோடு சேர்ந்து எடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டு வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதேபோல பேட்டரியில் இயங்கும் மரம் அறுக்கும் ரம்பம் ஒன்றும் ரத்தக் கரையோடு கிடந்தது. அந்த ரம்பம் எங்கு வாங்கப்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்தபோது அதை பிரகாஷ், கடந்த 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வாங்கியிருந்ததற்கான பில் கிடைத்தது. அதனால் பிரகாஷ் குடும்பத்தினர் திட்டமிட்டே இந்த முடிவை எடுத்திருப்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வீட்டில் 4 பேர் சடலமாகக் கிடந்தனர். அருகிலேயே சுவற்றில் தற்கொலைக் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது. ரத்தம் உறைந்திருக்கும் அளவைப் பார்க்கும்போது குற்றம் இரவு 11 மணிக்குப் பின்னர் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரகாஷின் மனைவி, குழந்தைகள் யாரும் அலறி துடித்தது போலவோ, கை கால்கள் நகர்ந்ததாகவோ தெரியவில்லை. அதனால் மயக்க மருந்து கொடுத்து கழுத்தறுக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறோம். உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னரே இன்னும் பல தகவல்கள் உறுதியாகும்.
உயிரிழந்த பிரகாஷின் செல்போனை ஆய்வு செய்யவுள்ளோம். அவர் கடந்த 19ஆம் தேதியன்று ஆன்லைன் வாயிலாக மின் ரம்பம் வாங்கியுள்ளார். தற்கொலை கடிதம் இருந்தாலும் யாரேனும் மிரட்டி தற்கொலைக்கு தூண்டினார்களா? கடன் பிரச்சினையா? இல்லை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் அரங்கேற்றினரா என்ற கோணங்களில் விசாரிக்கிறோம். வீட்டின் கதவு திறந்தே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் வீட்டினுள் சென்று பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து
ரூ.3.50 லட்சம் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார்.
உயிரிழந்த பிரகாஷ் தனது திருமண நாளிலேயே தற்கொலையை நிகழ்த்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிரகாஷின் உறவினர்களிடம் பத்திரிக்கையாளர்கள் விசாரித்தபோது, காயத்ரியின் தந்தை திருப்பதிக்குச் சென்றுவிட்டு நேற்று பிரகாஷின் வீட்டுக்கு வந்தார். அதற்கு முன்பு அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டனர். ரம்பம் ஓடிய சத்தம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்டுள்ளது. ஆனால் வீட்டை சுத்தம் செய்யும் கருவி ஓடுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கருதியதாகக் கூறினர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பிரகாஷ், காயத்ரியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
– பாரூக்.