ரயில்கள் கோவை வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்! பொதுமக்கள் கோரிக்கை நிறைவேறுமா?

 

கேரளாவிலிருந்து போத்தனுார் வழியாகச் செல்லும் ஏழு ரயில்களை, உடனடியாக கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாகத் திருப்பிவிட வேண்டுமென்ற கோரிக்கை, மீண்டும் வலுத்து வருகிறது.தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலுக்கு அடுத்ததாக அதிக வருவாய் தரும் ரயில்வே ஸ்டேஷனாக கோவை சந்திப்பு உள்ளது. ஆனால் சேலம் கோட்டத்துக்குள் சேர்க்கப்பட்ட பின்னும் கோவை மீதான புறக்கணிப்பு தொடர்ந்து வருகிறது.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், அப்பட்டமான பாரபட்சம் நடப்பது ஒரு புறமிருக்க, கோவைக்கான ரயில் வசதிகளும் சரியாகக் கிடைப்பதில்லை.1996ம் ஆண்டில், இருகூர்-வடகோவை இருவழிப்பாதைப் பணிக்காக, போத்தனுார் வழியாக கேரளாவுக்குத் திருப்பிவிடப்பட்ட 13 ரயில்கள், இன்று வரை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு முழுமையாக இயக்கப்படவில்லை.

இந்த ரயில்களை மீண்டும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாகத் திருப்பிவிட வேண்டுமென்று, கோவையிலுள்ள அனைத்துத் தொழில், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி, ரயில்வே போராட்டக்குழுவும் துவக்கப்பட்டு, பல போராட்டங்களும் நடத்தப்பட்டன. போராட்டக்குழுவில் முக்கியப் பங்காற்றிய இப்போதைய எம்.பி.,நடராஜன், 2009ல் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன்பின், ஒவ்வொரு ரயிலாகத் திருப்பி விடப்பட்டன. 2014 வரையிலும், ஆறு ரயில்கள் மட்டுமே திருப்பி விடப்பட்டன. அவையும் வாராந்திர ரயில்கள் மட்டுமே. தினமும் சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் எதுவும் திருப்பப்படவில்லை.2014 – 2019 வரை எம்.பி.,யாக இருந்த நாகராஜன், இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. அதனால் ஐந்தாண்டுகளில் ஒரு ரயிலும் கூடுதலாக திருப்பி விடப்படவில்லை. மீண்டும் 2019ல், நடராஜன் எம்.பி.,யான பின்னும், இப்போது வரையிலும் அவரும் இந்த ரயில்களைத் திருப்புவதற்காக, பெரிதாக எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. இதனால் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல், எர்ணாகுளம்-டாடா நகர் (ஜாம்ஷெட்பூர்), எர்ணாகுளம்-பனாஸ்வாடி (பெங்களூரு), கொச்சுவேலி-ஹூப்ளி, மங்களூரு-சென்னை சென்ட்ரல் இரண்டு ரயில்கள் என ஏழு ரயில்கள், கோவை ரயில்வே ஸ்டேஷனை இன்று வரை புறக்கணித்துச் செல்கின்றன.

இந்த ஏழு ரயில்களில், ஹூப்ளி ரயில் தவிர, மற்ற ரயில்கள் அனைத்தும் தினசரி ரயில்களாகும். இவை நள்ளிரவு நேரங்களில், போத்தனுாரை கடக்கும் ரயில்களாக இருப்பதால், அங்கு சென்று கோவை பயணிகளால் ஏறிச் செல்ல முடிவதில்லை. இந்த ரயில்கள், கோவை வழியாக வந்தால் ஏராளமான மக்கள் பயன் பெறுவர். ஆம்னி பஸ்களில் பல ஆயிரம் கொடுத்து, சென்னைக்கும், பெங்களூருவுக்கும் செல்ல வேண்டிய அவலம் குறையும். ஆனால் தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டே, இந்த ரயில்களை கோவைக்கு வரவிடாமல் தடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.உதாரணமாக, தாம்பரத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் ஒரு ரயில் (எண்:06019), தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, எழும்பூர், பீச் ஸ்டேஷன், ராயபுரம், பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம் என ‘ரிவர்ஸில்’ ஊர் சுற்றிக் கொண்டு கோவையை நோக்கி வருகிறது. திருப்பூர் வந்த பின், அங்கிருந்து கோவைக்குள் வந்தால் நேரமாகுமென்று, போத்தனுார் வழியே கேரளா செல்கிறது.பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த புறக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ரயில்களை கோவைக்குத் திருப்பி விட வேண்டுமென்ற கோரிக்கை, மீண்டும் வலுத்து வருகிறது. கோவை எம்.பி.,நடராஜன் மட்டுமின்றி, கோவையின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதற்காக ஓரணியில் இணைந்து குரல் கொடுத்து, இந்த ரயில்களை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்குத் திருப்ப வேண்டுமென்பதே, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp