கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமும் துவங்கியுள்ளதால், பொதுமக்கள் விழிப்போடு இருக்கும்படி, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, அரசு எச்சரித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெங்கு பரவலும் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரையும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.திடீரென காய்ச்சல் அதிகரித்து, ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கிறது. காய்ச்சலின் அறிகுறி, கொரோனாவா அல்லது டெங்குவா என அறிய முடியாமல், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.மழைக்காலம் என்பதால், கொசுக்கள் உற்பத்தியும் பெருகிவருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு ‘ஏடீஸ்’ வகை கொசுக்களே முக்கிய காரணம் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வினியோகித்து வருகிறோம். தொடர்ந்து ஆய்வு நடத்தப்படுகிறது. குடிநீர் தொட்டிகளுக்கு மருந்து தெளித்தல், குறிப்பிட்ட இடைவெளியில் கொசுமருந்து அடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனர் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:மழை நீர் தேங்கும் இடங்களில் அதிகம் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ‘ஏடீஸ்’ வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் வீடுகளில் மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும்.வீட்டின் உள்ளும், வெளியிலும், பயன்பாடின்றிக் கிடக்கும் பிளாஸ்டிக் குடங்கள், பாட்டில்கள், பழைய டயர் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்காத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில், சுகாதாரத் துறையினர் வீடுவீடாக சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை ஆய்வில் ஈடுபடுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.குடியிருப்பு, வர்த்தகம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்துகின்றனர். அப்போது, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சுகாதாரமற்ற வகையில் இடத்தைப் பேணுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாரம் தோறும், சுகாதாரத்துறை அலுவலர்கள் களப்பணியாளர் களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, தேவையான அறிவுரைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.