வாலாங்குள கரையோரத்தில் காதலர்கள் என்ற போர்வையில், அத்துமீறுவோரின் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். திறந்த வெளியில் நடக்கும் பாலியல் அசிங்கத்தை கண்டு முகம் சுளிக்கும் பொதுமக்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளின் முதற்கட்டமாக வாலாங்குளத்தில், அழகுபடுத்தும் பணிகள் விரைந்து நடந்து முடிந்தன. வண்ண விளக்குகள், குளத்தினுள் நடைபாதை, ஆங்காங்கே அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க இருக்கைகள் என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சுங்கம் பைபாஸ் ரோட்டில், கிளாசிக் டவர் ரோடு சந்திப்பில் இருந்து சுங்கம் ரவுண்டானா வரை, இடதுபுறம் பொதுமக்கள் அமர்ந்து குளத்தை ரசிக்க இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது பொதுமக்களுக்கு வசதியாக இருக்கிறதோ இல்லையோ, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், இளசுகளுக்கும் வசதியாக மாறிவிட்டது. காதலர்கள் என்ற போர்வையில், இங்கு வரும் பலர், பட்டப்பகலில் செய்யும் சேஷ்டைகளை காணும் பொதுமக்கள், ‘கருமம் கருமம்’ என தலையில் அடித்துச் செல்கின்றனர். திறந்தவெளியில் விபச்சாரம் நடக்கிறதோ என எண்ணும் அளவுக்கு, எல்லை மீறுகின்றனர்.முன்பு வ.உ.சி., பூங்கா, ரேஸ்கோர்ஸ் சுற்றுசாலையில், இதேபோன்று பொதுமக்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில், சிலர் நடந்து கொண்டனர். தற்போது வ.உ.சி., பூங்கா மூடப்பட்டு விட்டது. ரேஸ்கோர்ஸில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இவர்களுக்கு, வாலாங்குளம் புகலிடமாக மாறியுள்ளது.
வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரமான பகுதிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், இவர்களுக்கு வசதியாக போய் விட்டது. எவரை பற்றியும் கவலைப்படுவதே இல்லை.நாள் முழுக்க அமர்ந்து, முகம் சுளிக்கும் வகையில் அருவருப்பான முறையில் சில்மிஷங்களில் ஈடுபடுவதும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இங்கு குழந்தைகளுடன் வரும் குடும்பத்தார், அவசர அவசரமாக கிளம்பிச் சென்று விடுகின்றனர்.
இப்பகுதியில் தினமும் ‘வாக்கிங்’ செல்லும் ஒருவர் கூறுகையில், ‘யாரு பெத்த பிள்ளைகளோ, இப்படி பப்ளிக் பிளேஸ்க்கு வந்து கெட்டுப்போகுதுங்க. பிள்ளைங்க படிச்சுட்டு வருவாங்கன்னு நம்பி பேரன்ட்ஸ் அனுப்பறாங்க.
இங்க இவங்க பண்ற சேட்டைகளை பார்த்தா, தெரு நாய்ங்க பரவாயில்லையோன்னு தோணுது.
அதுலயும் ஸ்கூல் பசங்க நிறையபேரு வர்றாங்க. அவங்க பண்ற சேட்டைகளை மொபைல்ல படமும் எடுத்துக்கிறாங்க. அந்த படங்களை வச்சு பொண்ணுங்களை மிரட்டி, விபரீத சம்பவம் நடக்கறதுக்கு முன்னே, போலீஸ் தடுக்கணும். தினமும் இந்த வழியா போலீஸ் ரோந்து போக வச்சு, இந்த ஏரியாவுலயே தலைகாட்ட முடியாத அளவுக்கு இவங்களை விரட்டணும்’ என்று புலம்பித்தீர்த்தார். புதிய போலீஸ் கமிஷனர் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்து, அப்பாவி பெற்றோர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க தீவிர நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.