‘இந்திய மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது, உண்டியலில் பணம் செலுத்த வேண்டாம்’ – ஆதீனங்கள் கூற்று சரியா?!!

மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 93% இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 80% இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்றும் கோவில்களில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்படும் பணம் வேறு எதற்கு செலவிடப்படுவதாகவும் பேசப்பட்டிருக்கிறது. இது உண்மையா?

மதுரை பழங்காநத்தத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம், கோயம்புத்தூர் காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மதுரை ஆதீனமும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேரூர் ஆதீனமும் முன்வைத்த கருத்துகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய பேரூர் ஆதீனம், “சுதந்திரத்திற்கு முன்பு 93% இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 80% இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல் செய்ய வேண்டும்” என்றார்.

அதேபோல அந்த துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், “தற்பொழுது சாமி வருவதைப் போல உண்டியல் வருகிறது. இந்து அறநிலையத் துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள், அந்த காசு அந்தந்த கோவிலுக்கு செல்வதில்லை, உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது”, என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இந்துத்துவ அமைப்புகளும் கட்சிகளும் அவ்வப்போது சொல்வது வழக்கம். இப்போது தமிழ்நாட்டில் ஓர் ஆதீனமும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கருத்து உண்மையா?

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1941ல் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக இந்து – முஸ்லிம் மக்கள் தொகை தொகுத்து அளிக்கப்படவில்லையென்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு சமஸ்தானத்திலும் எவ்வளவு பேர் இந்துக்கள், எவ்வளவு பேர் முஸ்லிம்கள் என்ற தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தத் தருணத்தில் இந்தியா என்பது தற்போதைய இந்தியப் பகுதியோடு, பாகிஸ்தான், வங்கதேச பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

இந்தப் பின்னணியில் 1941ஆம் ஆண்டில் இந்தியாவில் 59.38% இந்துக்களும், 23.47% இஸ்லாமியர்களும் வசித்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாடு பிரிக்கப்பட்டதால், இஸ்லாமியர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகள் பாகிஸ்தானாக சென்றுவிட்ட நிலையில், இஸ்லாமியர்களின் விகிதம் வெகுவாகக் குறைந்தது. அதன்படி, 1951ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இந்துக்கள் 84.1 சதவீதமாகவும் முஸ்லிம்களின் விகிதம் 9.8 சதவீதமாகவும் இருந்தது. கிறிஸ்தவர்கள் 2.3% பேர் இருந்தனர்.

இதற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977ஆக இருந்தது. இதில் இந்துக்களின் சதவீதம் 79.79. இஸ்லாமியர்களின் சதவீதம் 14.22.

ஆதீனம் குறிப்பிட்டதைப் போல இந்தியாவில் ஒருபோதும் 93 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்ததில்லை. 1941ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் விகிதம் 59.38ஆக இருந்து, பிரிவினைக்குப் பிறகு சுமார் 84 சதவீதமாக உயர்ந்து தற்போது 80 சதவீதமாக இருக்கிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை 23.47 சதவீதமாக இருந்து, பிரிவினையின்போது 9.8 சதவீதமாகக் குறைந்து, தற்போது 14.22 சதவீதமாக இருக்கிறது. ஆகவே, 93 சதவீத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைந்தது என்ற கூற்றுக்கு ஆதாரமே கிடையாது.

அடுத்ததாக, திருக்கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்படும் பணம் வேறு எதற்கோ செலவழிக்கப்படுகிறது என்ற மதுரை ஆதீனத்தின் கருத்து உண்மையா எனப் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இது போன்ற ஒரு பிரசாரம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டது. கோவில்களில் வைக்கப்படும் உண்டியல்களில் செலுத்தப்படும் தொகை, கோவிலின் நலனுக்காக பயன்படுத்தப்படாது. மாறாக, அரசின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அரசியல்வாதிகள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் செய்திகள் பரப்பப்பட்டன.

உண்மையில், கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை அப்படி கோவிலின் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, அரசோ எடுத்துக்கொள்ள முடியுமா? உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் (அவை ரொக்கமாகவோ, நகையாகவோ, விலை உயர்ந்த உலோகங்களாகவோ இருக்கலாம்) யாரைச் சென்று சேர்கின்றன?

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் உண்டியல்களை எண்ணுவதற்கு பல்வேறு நடைமுறைகளும் விதிகளும் கடைபிடிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கோவிலிலும் உண்டியல்களைத் திறப்பதற்கு பல்வேறு கால அளவுகளில் திறக்கிறார்கள். பெரும்பாலும் மாதம் ஒரு முறையோ அல்லது உண்டியல் நிறையும் காலத்தைக் கணக்கில்வைத்தோ உண்டியல்கள் திறக்கப்படும். இதுதவிர, எல்லாக் கோவில்களின் உண்டியல்களும் பசலி ஆண்டின் இறுதியில் அதாவது ஜூன் மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்படும்.

ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அந்தக் கோவில்கள், அறநிலையத் துறையின் ஆய்வாளர் அல்லது சரக ஆய்வர் முன்னிலையில் திறக்கப்படும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வருவாயைக் கொண்டுள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் துணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட படிநிலையில் உள்ள அதிகாரியின் முன்னிலையில் திறக்கப்படும்.

கோவில் உண்டியல்கள் எல்லாவற்றுக்குமே இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று அந்த உண்டியலிலேயே அமைந்திருக்கும் பூட்டு. மற்றொன்று வெளியில் பூட்டப்படும் பூட்டு. இவற்றின் சாவிகளில் ஒன்று கோவிலின் நிர்வாக அதிகாரியிடமும் மற்றொன்று கோவிலின் தக்காரிடமோ (Fit person) அறங்காவலரிடமோ இருக்கும்.

உண்டியல்களின் பூட்டுகள் எல்லாமே துணியால் சுற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல, இந்த பூட்டுகளுக்கான சாவியும் துணியால் சுற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். உண்டியல் திறக்கப்படும் நாளில் இரு தரப்பாரிடமிருந்தும் சாவிகள் கொண்டுவரப்பட்டு, அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் அவை பிரிக்கப்படும். அதற்கு முன்பாக, எல்லா உண்டியல்களிலும் வைக்கப்பட்ட முத்திரைகள் உடையாமல் இருக்கின்றனவா என்பது வெளியிலிருந்து வரும் இணை ஆணையரால் பரிசோதிக்கப்படும்.

இதற்குப் பிறகு, முதல் உண்டியல் திறக்கப்பட்டு அவற்றில் இருக்கும் காணிக்கை டிரெங்க் பெட்டி ஒன்றுக்கு மாற்றப்படும். எந்த உண்டியல், எந்த டிரங்க் பெட்டி, எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது என்ற விவரங்கள் ஒரு பதிவேட்டில் குறிக்கப்படும். அந்த டிரங்க் பெட்டி நிறைந்தவுடன் அது பூட்டப்பட்டு, அடுத்த பெட்டி கொண்டுவரப்பட்டு காணிக்கை நிரப்பப்படும். பிறகு அந்த டிரெங்க் பெட்டிகள் காணிக்கை எண்ணும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அது பெரும்பாலும் எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அமைந்த மண்டபமாக இருக்கும்.

அந்த மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கொட்டப்படும். அங்கே கோவிலின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் (பெரிய கோவிலாக இருந்தால்) இருப்பார்கள். காணிக்கையை எண்ணுவதற்கு தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். அவர்களது விவரங்கள் வாங்கிக்கொள்ளப்பட்டு காணிக்கையை எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வகை நோட்டும் பிறகு கட்டாக கட்டப்பட்டு, அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுக்கப்படும். இப்படியாக எல்லாப் பணமும் எண்ணி முடித்த பிறகு, மொத்தப் பணமும் வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு, கோவிலின் முதலாம் கணக்கில் (ஒவ்வொரு கோவிலிலும் இரண்டு கணக்குகள் இருக்கும். ஒன்று வரவுக்கானது. மற்றொன்று செலவுக்கானது) வரவு வைக்கப்பட்டதற்கான சலான் கோவிலின் அதிகாரியிடம் அளிக்கப்படும். அந்த சலான் எண் கோவிலின் உண்டியல் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டவுடன் உண்டியல் எண்ணும் நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

இந்த உண்டியலில் விழுந்த உலோகங்கள் ஒரு நிபுணர் மூலம் பிரிக்கப்பட்டு தங்கம், வெள்ளி, தாமிரம் என வகைப்படுத்தப்பட்டு, எலெக்ட்ரானிக் தராசின் மூலம் நிறுத்து கோவிலின் கணக்கில் வைக்கப்படும். நகைகள் விழுந்திருந்தால் அவையும் பதிவுசெய்யப்பட்டு, கோவிலின் நகைகள் வைக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்த விவரங்கள் எல்லாம் உண்டியல் பதிவேடு, காணிக்கைப் பதிவேடு, நகை பதிவேடு என பல்வேறு பதிவேடுகளில் பல்வேறு அதிகாரிகளின் ஒப்புதலுடன் பதிவுசெய்யப்படும். அதேபோல, உண்டியல் பணத்தை எண்ணியவர்களின் கையெழுத்துகளும் வாங்கப்படும்.

மதுரை ஆதீனத்தின் கீழ் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில், திருப்புறம்பியம் சாட்சி நாதேஸ்வரர் கோவில், கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்தக் கோவில்களின் உண்டியல் திறக்கப்படும்போது கோவிலின் அறங்காவலர் என்ற முறையில், ஆதீனமே செயல்படுவார். உண்டியல்களின் ஒரு சாவி தொகுப்பு ஆதீனத்தின் வசமே இருக்கும். காணிக்கைகள் எண்ணப்பட்ட பிறகு, அவை கோவிலின் கணக்கில்தான் வரவுவைக்கப்படும். இதற்கு ஆதீனத்தின் ஒப்புதலும் பெறப்படும்.

நன்றி: முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp