கண்ணீருடன் நின்ற மணப்பெண்ணின் பெற்றோர்! தொலைந்துபோன நகையை நேரில் கொண்டுவந்த ஆட்டோ ஓட்டுநர்!

திருமணத்தை கோயிலில் முடித்துவிட்டு ஏனைய நிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்த மணப்பெண்ணின் பெற்றோர், ஆட்டோவில் தவறவிட்ட நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று விருதுநகர் ராமர் கோவிலில் திருமணம் நடந்தது. மற்ற வைபவங்கள் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், மணப்பெண்ணின் பெற்றோர் திருமணம் நடைபெற்ற ராமர் கோயிலில் இருந்து மண்டபத்திற்கு செல்ல ஆட்டோவில் பயணித்தனர். ஆட்டோ ஓட்டுநர் ராமர், இருவரையும் திருமண மண்டபத்தில் இறக்கி விட்டுவிட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதை கண்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ராமர். பேக்கை திறந்து பார்த்தப்போது நகைகள் இருப்பதைக் கண்ட அவருக்கு, காலை திருமண மண்டபத்தில் சவாரி இறக்கி விட்டது நினைவுக்கு வர, அந்த பேக்கை எடுத்துக்கொண்டு உடனடியாக அந்த மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே, பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் மண்டபத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நகையை தவற விட்ட கவலையில், பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீருடன் அங்கு நின்றிருந்தநிலையில், ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களிடம் நகை இருந்த பேக்கை வழங்கினார். அங்கிருந்த, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலால் திருமண நகையை இழந்து, பெண்ணின் வாழ்க்கையை குறித்த கவலையில் இருந்த பெண்ணின் பெற்றோர்களின் கவலை தீர்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ஆட்டோ டிரைவர் ராமரின் நேர்மையை பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கினார்.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp