தங்கள் குழந்தைகளுக்கு எப்படியாவது நல்ல தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் வசதிக்கு மீறி பிரபலமான கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள். அவ்வாறு சேர்க்கும் பெற்றோர்கள் பல சிரமமான சூழ்நிலையை கடந்துதான் கல்விக் கட்டணத்தை கட்டி குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் வேலை சரிவர அமையாத சமயங்களில் மற்றும் பொது முடகத்தால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த கல்வி கட்டணத்தை செலுத்த மிகவும் தடுமாறி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கோடை விடுமுறை முடிந்து தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல துவங்கும் காலம் நடுத்தர குடும்பத்து பெற்றோர் படும் துயரத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை திரட்டுவது எப்படி? என்ற சிந்தனையே இந்த காலகட்டத்தில் பெற்றோர் மனதில் இருக்கும்.
தெரிந்தவர்களிடமும், சிறு நிதி நிறுவனங்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கும் பெற்றோர் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளின் கல்வி (கடனை) கட்டணத்தை செலுத்துகின்றனர். இந்த நிலையில், பள்ளிகள் திறப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தங்கள் சேமிப்பாக வைத்த நகைகளை விற்பனை செய்தும் அடகு வைத்து நிதி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
கோவையில் கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பாக வைத்திருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். இது தவிர அடகு வைத்து கடன் வாங்கியவர்களும் உள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், “கொரோனாவின் தாக்கத்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல சம நிலையை அடைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் சேமிப்பாக வைத்திருந்த நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக நடக்கும் விஷயம் தான் இது என்றாலும் இந்தாண்டு அதிக அளவில் தங்கம் விற்பனையாகியுள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ” நீண்ட விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் துவங்கியுள்ளன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சேமித்து வைத்த நகைகளை விற்பனை செய்கிறோம். தமிழக அரசு கல்விக்கான கட்டணத்தை நிர்ணயித்தது, எந்தப் பள்ளியும் ,கல்லூரியும் அதனை கடைபிடிப்பதில்லை இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்றனர்.
தங்களது குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான கல்வியை வழங்க வேண்டும் என்றே அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். அரசாங்க ஊழியர்களும் மாத சம்பளம் வாங்குபவார்களும் தங்களது குடும்ப பட்ஜெட்டில் கல்விக்கான தொகையை ஒதுக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் கல்விக் கட்டணத்தை செலுத்தி விடுவார்கள் ஆனால் தினக்கூலி மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் நிலைமையோ பரிதாபம்தான். வேலை கிடைக்காத சூழ்நிலையில் பொது முடக்கத்தால் முடங்கிப்போன நிலையில் கல்விக் கட்டணங்களை சிறுக சிறுக கட்டி முடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதற்காக நகையை அடகு வைப்பது,தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது உறவினர்களிடம் கடன் வாங்கி கல்வி கட்டணம் செலுத்துவது போன்ற நிலையில் தான் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.