தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்குக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டத்திற்குப் புறம்பாக குட்கா பொருட்கள் தொடர்ந்து விற்பனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் திலகம். இவர் தனது மகன் கவியரசன் உடன் அங்கு மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் கவியரசு மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது மதியம் சுமார் 1 மணியளவில் வெள்ளை நிற காரில் 4 பேர் வந்துள்ளனர். தாங்கள் போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாகத் தகவல் வந்துள்ளது என்றும் கடையைச் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி கவியரசுனும் சோதனை நடத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
காரில் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் 3 பேர் கடைக்குள் சென்று சோதனை நடத்தி உள்ளனர். கடையில் செய்த சோதனையில் குட்கா ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி எதிரில் உள்ள வீட்டிற்குக் கவியரசனை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரிடமிருந்த செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.
வீட்டிலும் எதுவும் கிடைக்காததால் கவியரசனைக் காரில் ஏற்றி உட்கார வைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றபின் காரிலிருந்து இறக்கி விட்டுச் சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த கவியரசன் வீட்டில் பணம் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கவியரசன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். குட்கா சோதனை என்று கூறி, பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.