ஆனைமலை தாலுகாவிலுள்ள 80 சதவீதம் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். இந்நிலையில் தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கும் 48 கிராமங்களும் உள்ளன.
இவற்றில் 8,200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இதேபோல் ஆனைமலை ஒன்றியத்தில் மொத்தம் 19 ஊராட்சிகளில் 68 குக்கிராமங்கள் உள்ளன. வனப்பகுதி மற்றும் சமவெளிப்பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. கான்கிரீட், சிமென்ட் ஷீட், தகர மற்றும் ஓடுகள் கொண்ட மேற்கூரையுள்ள வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால், வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்தும், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் வனத்துறை சார்பில் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. ஆனைமலை தாலுகாவிலுள்ள 80 சதவீதம் தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் சிதிலமடைந்து, கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகளுடன் காட்சியளிக்கின்றன. பக்கவாட்டு சுவர்கள் வலுவிழந்து, தொகுப்பு வீடுகளில் மக்கள் உயிரை பணயம் வைத்து வாழ்கின்றனர். பழைய சர்க்கார்பதி சின்னாறுபதி, தம்மம்பதி, நாகரூத்து உள்பட பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுவதால், தொகுப்பு வீடுகளில் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். லேசான மழை பெய்தாலே வீடுகளுக்குள் மழைநீர் கசிந்து மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
பழங்குடியின மக்கள் பலரும் தொகுப்பு வீடுகளில் வசிக்க முடியாமல், வீடுகளை விட்டு வெளியேறி, வனத்தில் குடிசை அமைத்து வாழ்கின்றனர். உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க.,வினரும் சட்டசபை தேர்தலில் வால்பாறை எம்.எல்.ஏ.,வும், தொகுப்பு வீடுகளை புதுப்பித்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அரசும், மக்கள் பிரதிநிதிகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் ஏமாற்றமே மக்களின் வாழ்க்கையாக உள்ளது. சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை புதுப்பிக்கவும், பழுதான வீடுகளை இடித்து அகற்றி புதிய வீடுகள் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.